தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி, பின் நடிப்புத் திறமையால் முன்னேறிய நடிகர்கள் பலர் உள்ளனர். இவ்வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருப்பவர் தான் நடிகர் சசிகுமார். சினிமா பயணத்தில் நிறைவேறாத ஆசை குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் சசிகுமார்.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் இவர் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம், சூப்பர் ஸ்டார் நடித்த குசேலன் படத்துக்குப் போட்டியாக வெளிவந்தது. நல்ல திரைக்கதையைக் கையாண்ட சசிகுமாருக்கு இப்படம் வெற்றியடைந்தது மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதற்குப் பிறகு இவர் ஒருசில படங்களை இயக்கி இருந்தாலும், நடிகராக நடித்தது தான் அதிகம். கிராமத்து ஸ்டைலில் தாடியுடன் திரையில் தோன்றும் சசிகுமாருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது நாடோடிகள் படத்திற்குப் பிறகு தான்.
மதுரையில் உள்ள புதுதாமரைப்பட்டி தான் சசிகுமாருக்கு சொந்த ஊர். மதுரை ஒத்தக்கடை அருகே சிவலிங்கம் என்ற ஒரு தியேட்டர் சசிகுமார் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது. சினிமாவில் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற வேட்கையில் முயற்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், நிதி நெருக்கடி காரணமாக தியேட்டரை மூட பங்குதாரர்கள் முடிவெடுத்தனர். ஆனால் தான் நடிக்கும் ஒரு படத்தையாவது சிவலிங்க தியேட்டரில் பார்க்க வேண்டும் என சசிகுமார் ஊஆசைப்பட்டார். இன்னும் கொஞ்ச நாள் இருந்தால், எனது படத்தைப் பார்த்து விடுவேன் என பங்குதாரர்நகளிடம் கேட்டுப் பார்த்தார். ஆனால், யாரும் ஒத்துழைக்கவில்லை.
தனது படத்தைத் தான் பார்க்க முடியவில்லை. தான் உதவி இயக்குநராக பணிபுரிந்த “ராம்” படத்தையாவது பார்ப்போம் என முன்வரிசையில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தார். அமீர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ராம் திரைப்படம் அம்மா மகன் பாசப் பிணைப்பை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சசிகுமாருக்கு தனது உறவுக்காரரான கந்தசாமி மூலமாகத் தான் சினிமா ஆசைப் பிறந்தது. பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் இந்த கந்தசாமி. அதன் பிறகு உதவி இயக்குநராக பணிபுரிந்து, இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வளர்ந்து விட்டார் சசிகுமார். நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டி புலி, பிரம்மன், வெற்றிவேல், கொடி வீரன், கென்னடி கிளப், அயோத்தி மற்றும் கருடன் போன்ற பல படங்களில் சசிகுமார் நடித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கிறார் சசிகுமார். இவர் தயாரித்த பசங்க திரைப்படம் இன்று வரையில் தமிழ் சினிமாவில் பள்ளிக் குழந்தைகள் கொண்டாடும் திரைப்படமாக மிளிர்கிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக மாறினாலும், சிவலிங்கம் தியேட்டரில் தனது படத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றளவும் சசிகுமாருக்கு உள்ளது. அவரது இந்த ஆசை நிறைவேறாமல் இருக்கலாம்; ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருப்பதே பெருவெற்றி தான்.