தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான சர்வானந்த் ஐ டி ஊழியரான ரக்ஷிதா ரெட்டியை மணக்கவிருக்கிறார். இவர்களது திருமணம் ஜூன் 3 ஆம் தேதி ராஜஸ்தான், ஜெய்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெறவிருக்கிறது. திருமண விழா இரண்டுநாள் விழாவாக மிகவும் கிராண்டாக நடைபெறும் என சர்வானந்தின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) தெரிவித்திருக்கிறார். ராயல் வெட்டிங் ஸ்டைலில் நடைபெறவிருக்கும் இந்தத் திருமணத்தில், மணமக்களின் மெஹந்தி விழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து திருமணத்துக்கு முன்பாக இரவு 11 மணி அளவில் தெலுங்கு வழக்கப்படி பெல்லி கொடுக்கு(மணமகன்) விழா நடைபெறும். என்றும் அவர் கூடுதல் தகவல்கள் அளித்துள்ளார்.
தற்போது , நண்பர்களுக்கும், பிரபலங்களுக்கும், திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மணமக்கள் மோதிரம் மாற்றி தங்களது திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அமலா அக்கினேனி, ராணா டக்குபாட்டி, நிதின், எஸ்.எஸ்.கார்த்திகேயா, சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல குறிப்பிடத்தக்க பிரபலங்கள் இந்த ஜோடிக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூரில் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதாவின் திருமணத் திட்டங்கள் குறித்து தற்போது வெளிவந்துள்ள இந்த செய்திகள், இந்த ஜோடி தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டதாக கிளப்பி விடப்பட்ட ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது .
ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் 2011 ஆம் ஆண்டில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் மற்றும் சேரன் இயக்கிய ‘ஜே கே எனும் நண்பனின் கதை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததின் வாயிலாக தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராகவெ இருக்கிறார் சர்வானந்த்,
அவரது வருங்கால மனைவியான ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முதலாம் கட்ட அரசியல்வாதிகளுள் ஒருவரான போஜ்ஜலா கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி என்பதோடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளும் கூட என்கிறார்கள்.