
சுரேஷ். G யின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் எறும்பு. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே ஒரு கிராமத்தில் விவசாய கூலி யாக இருப்பவர் அண்ணா துரை (சார்லி). வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம் அவமானப்படுத்தப்படுகிறார் இவரின் மறைந்த முதல் மனைவிக்கு ஒரு மகள் (மோனிகா) ஒரு மகன் (மாஸ்டர் சக்தி ரித்விக்) இருக்கிறார்கள். கடன் பிரச்சனை தீர தனது இரண்டாவது மனைவியுடன் கூலி வேலைக்கு செல்கிறார். இந்த நேரத்தில் இவரது மகன் ரித்விக் மோதிரத்தை தொலைத்து விட, சிறுவர்களான மகனும் மகளும் சித்தி அடிக்கு பயந்து மீண்டும் மோதிரம் வாங்க பல சிறு சிறு வேலைகள் செய்து பணம் சேகரிக்கிறார்கள். இருந்தாலும் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேரவில்லை. கூலி வேலைக்கு சென்ற அப்பாவும், சித்தியும் வீடு வந்து சேருகிறார்கள். இறுதியில் நடக்கும் விஷயங்கள் ஒரு சிறந்த உணர்வை (feel good) நமக்கு தருகிறது.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் நாடகத்தன்மையுடன் இருந்தாலும் இரண்டாம் பாதி உணர்வுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லராக வந்துள்ளது. காட்டு மன்னார் கோவிலின் அழகை ஒரு கவிதை போல படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் காளிதாஸ். மோனிகா, ரித்விக்கை பார்க்கும் போது நம் குழந்தை பருவம் நினைவுக்கு வருகிறது. ஏழை வீட்டின் மிகப்பெரிய செல்வமே அந்த வீட்டின் குழந்தைகள் தான் என்பார்கள். இந்த குழந்தைகளின் நடிப்பில் இதை நம்மால் உணர முடியும்.
நகைச்சுவை மட்டுமல்லாது தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை எறும்பு படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் சார்லி. கந்து வட்டி நபரிடம் அவமானப்படும் போதும் குடும்பத்தை நேசிக்கும் போதும் நம் வீட்டில் நடப்பது போல நடித்திருக்கிறார். பெரிய மீசையில் மனிதாபிமானம் இல்லாத ஒரு கந்து வட்டி நபரை கண் முன் காட்டுகிறார் M.S பாஸ்கர். ஜார்ஜ் மரியான் செய்யும் நகைச்சுவை இதற்கு முன் பல படங்களில் செய்ததை நினைவு படுத்துக்கிறது. சூசன் கண்களிலேயே நமக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார். சேமிக்கும் பழக்கத்திற்கு எறும்பை உதாரணம் சொல்வார்கள். இந்த எறும்பு அன்பு என்ற மேஜிக்கை சொல்கிறது. இரண்டு மணி நேரத்திற்கும் சற்று குறைவான நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியான படம் தந்ததற்கு இயக்குனரை பாராட்டலாம் .