‘காலங்கள் கடந்தாலும் காதல் மறைவதில்லை’ அன்பு மனைவின் கண்ணீர் பதிவு!

‘காலங்கள் கடந்தாலும் காதல் மறைவதில்லை’ அன்பு மனைவின் கண்ணீர் பதிவு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானம், பவர் ஸ்டார், சேது ஆகிய மூவரும் ஒரு பெண்ணை காதல் செய்வதுபோல் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் ஷிவா எனும் பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் சேது. இதனைத் தொடர்ந்து அவர் வாலிப ராஜா, சக்க போடு ராஜா போன்ற படங்களிலும் நடித்தார். சேதுராமன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் ஒரு தோல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2020ம் ஆண்டு திடீரென மாரடைப்பால் காலமானார். மிக இளம் வயதில் அவர் இறந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நடிகர் சேது இறந்த பிறகு அவரது மனைவி உமா சேதுராமன் அவரது நினைவலைகள் குறித்து அவ்வப்போது இணைய தளத்தில் சில பதிவுகளைப் போட்டு வருகிறார். சேதுராமன்-உமா இவர்களின் திருமண நாள் நேற்று பிப்ரவரி 12. அதையொட்டி அவர்களின் திருமண நாளன்று எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதோடு ஒரு செய்தியையும் வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர்,

“ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளை நான் திரும்பிப் பார்க்கையில் காலம் வேகமாகக் கடந்து செல்கிறது என்பதை உணர முடிகிறது. ஆனால், நமது காதல் உணர்வுகள் மட்டும் மாறாமல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லச் செல்ல அத்துடன் உங்களின் வாழ்வில் இணைந்த நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. உங்களுக்கு வயதே ஆகாது. வானத்தைத் தொடும் ஆசைக் கொண்ட நீங்கள், எப்போதும் ஆர்வம் மிக்க மருத்துவராகவே இருக்கிறீர்கள். உங்கள் மீதான எனது காதல் அளவற்றது. இதுவரை நாம் திருமண நாளைக் கொண்டாடியதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மீதான அன்பை நான் வெளிப்படுத்தி உள்ளேன். அந்த இனிய நினைவுகளை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். இதையே இனிவரும் காலத்தில் தொடர்ந்து செய்வேன்” என்று உமா சேதுராமன் தனது பதிவில் கூறியுள்ளார்.

இணையத்தில் இந்தப் பதிவை கண்டுவரும் பலரும், ‘உண்மையான காதல் என்றும் மறைவதில்லை’ என்று தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com