
மார்க் ஆண்டனி படம் விவகாரம் தொடர்பாக தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவு.
விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை இந்தியில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டனர். இதற்கான பணிகளில் நடிகர் விஷால் ஈடுபட்ட பொழுது இந்தி தணிக்கைக்காக படம் மும்பை தணிக்கை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அப்போது மும்பை தணிக்கை அலுவலக அதிகாரிகள் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் அளித்தார். தணிக்கை அதிகாரிகள் மீது முன்னணி நடிகர் கூறிய புகார் என்பதால் இந்திய அளவில் முக்கிய பேசுபொருளாக மாறியது. இதை அடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
மேலும் தென்னிந்திய படங்கள் இந்தி ரீமேக் தணிக்கையை சென்னை தணிக்கை அலுவலகத்திலேயே குறிப்பிட்ட காலம் வரை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு சமன் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள பதிவு, இந்த தணிக்கைக்காக அதிகாரிகள் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக மும்பை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானேன். இது எனக்கு மிகவும் புதிய அனுபவமாக அமைந்தது. சிபிஐ விசாரணை நடத்தும் விதம் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.
சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். அதேசமயம் என் வாழ்நாளில் சிபிஐ அலுவலகத்திற்கு செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. சினிமாவின் ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க அனைவரும் முன்வர வேண்டும். நான் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பயணிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.