
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் எஸ்.ஏ.அசோகன். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் சிறந்த வில்லன் நடிகராக பார்க்கப்பட்டவர். இவரது நடிப்பில் வெளியான வில்லன் கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இவர் வில்லன் கதாப்பாத்திரம் மட்டுமின்றி பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார்.
இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்ததுண்டு. 70ஸ்,80ஸ் காலங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அசோகன் மற்றும் அவரது மனைவி மேரிஞானம் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். அதில் இவரது இரண்டாவது மகனான வின்சென்ட் அசோகன் பிரபல நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
'ஏய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமானவர் வின்செண்ட் அசோகன். இவர் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொட்டி ஜெயா, போக்கிரி, ஆழ்வார், யோகி, வேலாயுதம், சண்டமாருதம், மாரி 2, அரண்மனை 3 போன்ற படங்களில் வில்லனாக வின்சென்ட் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த காலத்திலேயே மதம் மாறி திருமணம் செய்த தனது தந்தையின் வாழ்க்கையை பற்றி மனம் திறந்துள்ளார் நடிகர் வின்செண்ட் அசோகன்.
சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர்,
"அப்பா கிறிஸ்துவர். அம்மா பிராமிண் பொண்ணு, இவர்களின் திருமணம் சர்ச்சில் தான் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தடைகள் வந்துவிடுமோ என்ற பயத்தில் அப்பா பதபதைப்புடன் தான் இருந்ததாக அம்மா கூறியுள்ளார். மேலும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, சர்ச் வாசலை மூடிவிட்டு உள்ளே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், மற்றும் எம்.சரவணன் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தாலும், இதை ஒரு விழாவாக மாற்றியவர் எம்.ஜி.ஆர் என்று அப்பா கூறியுள்ளார். மேலும், அப்பாவிடம் அம்மா மரியாதை கலந்த பயத்துடனே இருந்துள்ளார். எதாவது கேட்க வேண்டும் என்றாலும் என்னிடம் சொல்லித்தான் கேட்பார்,"
என்று கூறியுள்ள விண்செண்ட் அசோகன், அப்பா இறந்தவுடன், நடிகர் ஜெய்சங்கர் தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாக கூறியுள்ளார்.