
இந்திய சினிமாவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு ஒரு நற்பெயர் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டிற்கு தான் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர் என்று சொல்லாம். அந்த வகையில் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதுடன் சில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
அந்த வகையில் சடகோபன் ரமேஷ் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் வருண் சக்ரவர்த்தி, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக சில காட்சிகளில் நடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிரவோ சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் 'ஏன்டா' பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழகமெங்கும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாகவும், டிக்கிலோனா படத்தில் சந்தானத்துடனும் நடித்திருந்தார்.
இர்பான் பதான் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே பல இந்திய திரைப்படங்களில் இடம்பெற்ற ஹீரோக்களின் ஸ்டைலை 'இமிடேட்' செய்து வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 'புஷ்பா' படத்தின் ரிலீஸ் சமயத்தில் 'ஸ்ரீ வள்ளி' பாடலுக்கு இவர் நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரீல் அதிரடி வைரலானது. டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியதால் தெலுங்கு மக்களுக்கு டேவிட் வார்னர் அவ்வளவு பரிச்சயம்.
ஏற்கனவே இவர் இந்திய சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் தெலுங்கில் தயாராகும் ராபின் ஹூட் படத்தில் டேவிட் வார்னர் நடிப்பதை தயாரிப்பாளர் ரவி சங்கர் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
வெங்கி குடுமுல இயக்கத்தில் நித்தின் நாயகனாக நடிக்கும் ராபின் ஹூட் படத்தில் டேவிட் வார்னர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்து இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.