சமீபத்தில் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் இடையே பெருகி வரும் விவாகரத்துக்கள் அனைவரிடமும் பேசுபொருளாக மாறி உள்ளது. காதல் மணம் புரிந்து, வாரிசுகள் தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் சகிப்பு தன்மையின்றி குழந்தைகளின் நலனைக் கூட யோசிக்காமல் விவாகரத்து என்னும் முடிவை கையில் எடுத்து விடுகின்றனர்.
சினிமா துறை மட்டுமல்ல, தற்போது கல்வி அறிவும் சுதந்திரமும் பெருகி வரும் நிலையில், திருமணம் மீதான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் சிதைந்த நிலையில் தம்பதியர் இடையே மனக்கசப்புகளும் அதன் பின்விளைவாக விவாகரத்துகளும் நிகழ்ந்து வருவதை கண்கூடாகக் காண முடிகிறது. ஆனால், திருமண பந்தத்தின் அருமை புரிந்து வாழ்ந்த எண்ணற்ற தம்பதிகளும் நம்மிடையே உண்டு. அப்படி வாழ்க்கைத் துணையின் உன்னதத்தை உணர்ந்து வாழ்ந்து காட்டிய நட்சத்திர தம்பதி பற்றிய பதிவை இங்கு காண்போம்.
தமிழ் சினிமாவை பொற்காலமாக மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீதர். சினிமாவை நேசிப்பவர்கள் இவரைத் தவிர்க்கவே முடியாது. 1961ம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் ‘சித்ராலயா’வைத் தொடங்கிய இயக்குநர் ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.
கல்யாண பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை என அவர் தந்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நிறைய உண்டு. ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே ஒரு திரைப்படத்துக்கு மக்கள் பெரும் வரவேற்பைத் தந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆனால், விதியின் விளையாட்டிலிருந்து இவரும் தப்பவில்லை. ஆம், இத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் தந்து புகழின் உச்சத்திலிருந்த ஸ்ரீதரை திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது பக்கவாதம் என்ற மோசமான பாதிப்பு. சுறுசுறுப்பானவரை முடக்கி படுக்கையில் போட, வீட்டுக்குள்ளேயே அடங்கிப் போனார்.
அந்த மாபெரும் திரைக் கலைஞருக்கு மனைவியான தேவசேனா எனும் அற்புதப் பெண்மணி அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்குக் கண்ணாக கவனித்துக் கொண்டார். தாய் போல அனைத்தையும் முகம் கோணாமல் செய்து அன்பு காட்டியதன் பலன் நோய் தாக்குதலுக்குப் பிறகு ஸ்ரீதர் 14 வருடங்கள் வாழ்ந்து மறைந்தார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது சில நேரம் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்பும் ஸ்ரீதரின் ஆசையை சம்பந்தப்பட்டவருக்கு பணிவுடன் தெரிவித்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்து மகிழ்விப்பார் என அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் சொல்லி வியக்கின்றனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கணவரின் அன்புக்குரிய நண்பர்களை வரவழைத்து, அவர்களோடு கணவர் பேச முயற்சி செய்தவற்றை தான் பேசி அவர்களுக்குப் புரிய வைத்து கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்தவர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனா.
14 ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும் கண்ணீர் விடாமல் கணவருக்கு நம்பிக்கை தந்த தேவசேனாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது 2008 அக்டோபரில் அன்புக்குரிய கணவர் மறைந்தபோதுதான்.
சிறு கருத்து வேறுபாடுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்லும் தம்பதியர் இடையே தேவசேனா போன்ற பெண்மணிகள் போற்றத் தகுந்தவர்கள்தான்.