கத்தி மீது நடக்கக் கூடிய கதை - ஃபர்ஹானா !

கத்தி மீது நடக்கக் கூடிய கதை -  ஃபர்ஹானா !
Published on

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதிலிருந்து....

எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன்:

நான் நிறைய சிறு கதைகள் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக படைத்திருந்தார் நெல்சன். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரும்பாலான படங்களில் பெரிய வசனகர்த்தாக்கள் எழுதி கொடுத்த பெரும்பாலான வசனம் படத்தில் இடம் பெறாமலேயே போய்விடும். ஆனால், இப்படத்தில் 90 சதவீதம் நான் எழுதிய வசனம் இருந்தது பார்த்து மகிழ்ச்சி.

படத்தை முழுவதும் பார்த்ததும், இப்படி ஓர் அற்புதமான படமா என்று உணர்ச்சி வசப்பட்டேன். இப்படத்தில் என்னுடைய எழுத்து வேறு இடத்திற்கு என்னை கொண்டு செல்லும் என்றார் .

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்:

நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்:

ஃபர்ஹானா திரைப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3வது படம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நடிகை ஆண்ட்ரியா இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.படம் மதம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கத்தி மீது நடக்கக் கூடிய கதைதான் இப்படம். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.ஐஸ்டின் பிரபாகரன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சிறந்த இசையைக் கொடுத்து வருகிறார். ஃபர்ஹானா படத்திலும் 3 சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார். எனக்கு தேவையான இசையை ஐஸ்டினைத் தவிர வேறு யாரிடமும் உரிமையாக கேட்க முடியாது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு:

ஃபர்ஹானா மூன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் மதம் சார்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள் பயப்படும் படமாக இல்லாமல் கொண்டாடும் விதமான படமாக இருக்கும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com