"மறைந்த எம். எஸ். விஸ்வாநாதன் அவர்களின் ஸ்டூடியோவிற்கு சென்று வந்தால் ஒரு சாமியாரை பார்த்து வந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். அதே சமயத்தில் இளையராஜா ஸ்டூடியோவுக்குள் சென்றால் கொஞ்சம் பயம் வரும். நாம் எதுவும் தலையிடாமல் இருந்தால் இளையராஜாவிடமிருந்து மிக சிறந்த இசையை பெற்றுக்கொள்ளலாம்".
இப்படி சொல்வது வேறு யாரும் இல்லை நம்ம கமல்ஹாசன் தான். தேவி ஸ்ரீ பிரசாத் பாடி, நடனமாடி வழங்கியுள்ள 'ஓ பெண்ணே' என்ற சுயாதீன ஆல்பம் (Independent music) அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தான் கமல் எம். எஸ். வியையும், ராஜாவையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்."சினிமா வருவதற்கு முன்பு இது போன்ற சுயா தீன இசைகள் தான் அதிகம் இருந்தன. சினிமா எல்லா கலைகளையும் தனதாக்கி கொண்டது போல சுயாதீன இசையையும் தானதாக்கி கொண்டது.
என் சிறு வயதில் எங்கள் ஊரில் சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் மேடையில் ஒரு சினிமா பாடல் கூட பாடமாட்டார். மற்ற பாடல்களைதான் பாடுவார். அப்பாடல்களை ரசித்து கேட்க மிக பெரிய கூட்டம் இருக்கும். தற்சமயம் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் தனியிசை பாடல்களை உருவாக்கும் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்றார் கமல்.
பொதுவாக சினிமாவில் நுழைய விரும்பும் இசை அமைப்பாளர்கள் இது போன்ற சுயாதீன பாடல்களை ஒரு என்ட்ரி கார்டை போன்று பயன்படுத்துவார்கள். ஆனால் சினிமாவில் வெற்றி பெற்ற இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இது போன்ற சுயாதீன ஆல்பம் உருவாக்கி உள்ளது ஆரோக்கியமான விஷயம் என்கிறார்கள் இசை ஆர்வலர்கள். இந்த ஆல்பத்தை T-series சார்பில் பூஷன்குமார் தயாரித்துள்ளார். ஓ பெண்ணே ஆல்பம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.