Fight club Movie
Fight club Movie

விமர்சனம்: பைட் கிளப்!

Published on
பைட் கிளப்: ஓவர் சத்தம்!(2 / 5)

விளையாட்டு போட்டி, ஏரியா அடிதடி, அரசியல், வட சென்னை களம்  துரோகம் என பல படங்களில் அரைத்த மாவை எந்தவித சுவையான மசாலாவும் சேர்க்காமல் பைட் கிளப்  படத்தை  இயக்கி உள்ளார்  அப்பாஸ் அ. ரஹ்மத். ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை வழங்கி உள்ளார்.       

வட சென்னை வாலிபர்களின் வளர்ச்சிக்காக எப்போதும் சிந்திக்கும் பெஞ்சமின் என்பவரை அரசியலில் வர துடிக்கும் கிருபா என்பவரும், ஜோசப் என்பவரும் இணைந்து கொன்று விடுகிறார்கள். கிருபா அரசியலில் வளர்ந்து பெரிய ஆளாகி விடுகிறார். பொறாமை கொள்ளும் ஜோசப் செய்யும் சண்டைதான் இந்த பைட்          படத்தின் ஆரம்பம்.

காட்சிகள் வேகமாக செல்கிறது, சண்டை காட்சிகள் உருவாக்கபட்ட விதமும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாவது பாதி யு டர்ன் எடுத்து பழைய படங்களில் பார்த்த கதை ட்ராக்கில் ஏறிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான காட்சிகள் வந்து கொண்டு நம்மை அலுப்படைய செய்கிறது. 

படத்தில் நடிப்பில் அட்டகாசமாக நடித்திருப்பது ஜோசப்பாக நடிக்கும் அவிநாஷ்தான். ஒல்லி யான தேகத்தில் மிரட்டலான கண்களில் ஒரு மிரட்டல் நடிப்பை தந்திருக்கிறார்.விஜய குமார் உறியடி படத்தில் நடித்ததை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து நடித்திருக்கிறார்.ஒரு பெண் அடிக்கடி வந்து போகிறார் இவரை ஹீரோயின் என்று நாமும் நம்புவோம். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் அளிக்கிறது.படத்தில் வரும் கானா பாடல்கள் தாளம் போட வைக்கிறது.

எந்த வித புதிய காட்சி வடிவமைப்பும் இல்லாமல், பல படங்களில் பார்த்த வட சென்னை கதையை பெரிய மாற்றம் இல்லாமல் தந்துள்ளார் டைரக்டர். இந்த படத்தின் இறுதி காட்சியில்  ஹீரோ இரண்டு வில்லன்களை கொன்று விடுகிறார். இதை முதலில் செய்து இருந்தால் நாமாவது தப்பித்திருப்போம்.

logo
Kalki Online
kalkionline.com