ஆசியாவிலேயே முதல் முறையாக...'லைவ்' சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒரு படம்! பிரபு சாலமன் இயக்கும் 'மாம்போ'!

Mambo movie
Mambo movie
Published on

தமிழ்  சினிமாவில் ஆரம்ப காலம் முதல் யானை, புலி, நாய், பாம்பு  போன்ற பல விலங்குகளை இயக்குனர்கள்  நடிக்க வைத்திருக்கிறார்கள். சாண்டோ சின்னப்பா தேவர்,  ராம நாராயணன் போன்ற தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களில் விலங்குகள் முக்கிய பங்கு வகித்தன. இவர்கள் தயாரித்த படங்களின் வெற்றிக்கு இந்த படங்களில் நடித்த விலங்குகளும், பறவைகளும் ஒரு காரணமாக அமைந்தன. 

சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் மிருகங்களை வைத்து படம் எடுப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தனர். இருந்தாலும் ஒரு சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்  அரசு  விதித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மிருகங்களை வைத்து படம் எடுக்கிறார்கள்.

இவர்களில் முக்கியமானவர் பிரபு சாலமன். மைனா, கும்கி, காடன், செம்பி  என  தான் இயக்கிய படங்களில்  காடு, மலை சார்ந்த வாழ்வியலை சொன்னவர். கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி சிறப்பான கதையை தந்திருப்பார் பிரபு சாலமன். காடன் படத்தில் யானைக்கும் ஒரு மனிதனுக்கும் இடையிலான அன்பை சொல்லியிருப்பார்.

யானையின் அன்பை சொன்ன பிரபு சாலமன் தனது அடுத்த படத்தில் சிங்கத்தின் அன்பை சொல்ல போகிறார். சிங்கத்திற்கும், ஒரு சிறுவனுக்கும் இடையேயான அன்பை சொல்லும் 'மாம்போ' என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன்.   மாம்போ என்ற தலைப்பை நேற்று வெளியிட்டார் பிரபு சாலமன்.

இதையும் படியுங்கள்:
அடங்காத அசுரன் RAAYAN!
Mambo movie

இவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்தில்  'ஜாஸ்' என்ற புது வித மேற்கத்திய இசையை பயன்படுத்தி உள்ளார். ஆசியாவிலேயே முதல் முறையாக படம் முழுவதும் லைவ்வாக சிங்கத்தை நடிக்க வைத்துள்ளார்கள். பிரபல நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் மகனுமான ஸ்ரீ ஹரி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.  

பொதுவாக ஹீரோக்கள் தான் கம் பேக் தருவார்கள். இந்த மாம்போ படத்தில் தயாரிப்பாளர் கம் பேக் தந்துள்ளார். பொற்காலம், பெண்ணின் மனதை தொட்டு போன்ற சிறந்த படங்களை தந்த 'ரோஜா  கம்பைன்ஸ்' காஜா மொய்தீன்  18 ஆண்டுகளுக்கு பிறகு மாம்போ படத்தை தயாரிக்கிறார். இவர், தான் மீண்டும் படம் தயாரிக்க பிரபு சாலமன் கதையின் மீதுள்ள நம்பிக்கை தான் காரணம் என்கிறார்.

இவரை போலவே நாமும் பிரபு சாலமன் மீது நம்பிக்கை வைப்போம். அடுத்த ஆண்டு சிங்கத்தின் கர்ஜனையுடன் மாம்போ கம்பீரமாக ஒலிக்கும் என நம்புவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com