நச்சுன்னு நாலு படங்கள்! அவை உணர்த்தும் வாழ்க்கை பாடங்கள்!

Tamil Movies
Tamil Movies
Published on

வெள்ளித் திரை எத்தனையோ வெற்றிப் படங்களைக் கண்டிருக்கிறது! எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறது! வருடக் கணக்கில் சில படங்கள் ஓடி, வரலாறு படைத்திருக்கின்றன! எதிர்பார்த்த சிலவோ, ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக அளித்திருக்கின்றன! எல்லாவற்றுக்கும் காரணம் சினிமா ரசிகர்களின் சீரிய ரசனைதான்!

வருடக் கணக்கில் படங்கள் ஓடிய நிலை மாறி, ஒரு வாரம் முழுதாக உலகம் முழுதும் ஓடி விட்டாலே அதிக லாபம் சம்பாதித்து விடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்பு விஸ்தாரமாக இருந்த தியேட்டர்கள் இடிக்கப்பட்டு வீடுகளாகவும், மால்களாகவும் மாறி விட்டன! மால்களின் ஓரத்தி்ல், சின்ன ஹாலைச் சுற்றி நான்கைந்து தியேட்டர்கள், ஸ்க்ரீன் 1,2,3,4,5 என்று!

அமரன்:

நாம் நன்றாகத் தூங்க, காவல் துறையினர் கண் விழித்திருப்பதைப்போல், நாம் நன்றாக வாழ நம் ராணுவ  வீரர்கள் படும் பாட்டை, ஆழமாகச் சித்தரித்து உள்ளார்கள் அமரனில்! சிவாவும், சாயும் கச்சிதமாகப் பாத்திரத்துடன் ஒத்துப்போய், நம்மைப் பதை பதைக்கச் செய்கிறார்கள்! முகுந்த் வரதராஜனைப் போன்று திறமையும், தியாக உணர்வும் உள்ளவர்களால்தான் நாம் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். உண்மைக் கதையின் அடிப்படையில் என்பதால், உள்ளம் நோகவே செய்கிறது! சமீப காலத்தில் வெளியான படங்களில், தனித்து நிற்கிறது இது!

மெய்யழகன்:

மெய்யழகன், தஞ்சையின் பசுமையைப்போல் நம் மனத்திலும் பசுமையாய் வலம் வருகிறது! 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று விட்ட தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கிறார் அர்விந்த்சுவாமி! ’அத்தான்!அத்தான்!’ என்று அன்பொழுகக் கவனிக்கும் கார்த்தி யாரென்று தெரியாமல் அல்லாடுவதும், ஆனாலும் அத்தானை நன்கு கவனித்து அனுப்ப வேண்டுமென்றே பேரூந்தைக் கோட்டை விடுவதும், பின்னர் கிணற்றடியில், பாலத்தடியில் தண்ணி அடித்துக் கொண்டாடுவதும், ஊருக்குச் சென்ற பிறகும் வீடு வாங்க, தன் சொந்த சேமிப்பிலிருந்து பல லட்சங்களைத் தர ஏற்பாடு செய்வதும் அருமை! இயற்பெயர் தெரியாமல் அர்விந்த்சுவாமி தவிப்பதும், இறுதியாக பொடாடோ ஞாபகம் வர மெய்யழகன் நினைவுக்கு வருகிறார்! ’பாம்பு கடித்து விடுமோ? இருவரும் மீண்டும் சந்திக்காமலே போய்விடுவார்களோ!’ என்ற பயங்களை விதைத்தாலும், இறுதியில் சுபமாக முடித்துள்ளது கிலாசிக்!

போகும் இடம் வெகு தூரமில்லை:

போகும் இடம் வெகு தூரமில்லை, OTT யில் வெளியான ஒரு நல்ல படம்! ஓர் அமரர் ஊர்தியில் விமலும் கருணாசும் இணைந்து பயணிப்பதும், கொண்டு செல்லப்படும் ‘பாடி’காணாமல் போவதும், கூத்து கட்டும் நடிகனான கருணாஸ் தன் உயிரையே மாய்த்துக் கொண்டு, நண்பனைக் காப்பாற்றுவதுந்தான் கதை! கதையின் நகர்வுக்கும் த்ரிலுக்கும் குறைவில்லாமல், அதே சமயம் நெகிழச் செய்து நம் நினைவுகளில் தங்கி விடும் பாத்திரங்கள்! சில மணி நேர நட்புதான்!ஆனாலும் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்த தன் வாழ்வை நண்பனுக்காகத் தியாகம் செய்வது சூபர்ப்!

அயோத்தி:

அயோத்தி படம் ஓராண்டுக்கு முன்பே வெளியானது என்றாலும், உயர்ந்த லட்சியத்துடன் செயல்படும் இளைஞர்களின் கதை என்பதால், இதயத்தை வருடிக் கொடுக்கிறது! பாவத்தைப் போக்க ராமேஸ்வரம் வரும் குடும்பம், குடும்பத் தலைவனின் அவசரம் காரணமாக மனைவி இறந்து போக, பாஷை புரியாத அவர்களை, ’பாடி’யுடன் சொந்த ஊர் அனுப்ப சசிகுமார் அன்ட் கோ வினர் படும் அவஸ்தைகளைப் படம் விரிவாக விளக்குகிறது!

இதையும் படியுங்கள்:
மீண்டும் வருகிறது டப்பிங் சீரியல்… ஆனால் பாலிமர் தொலைக்காட்சியில் இல்லை!
Tamil Movies

அமரன், ராணுவ வீரர்களின் அயராத உழைப்பையும், குடும்பங்களை விட்டுவிட்டு அவர்கள் தனியாகப் படும் அல்லல்களையும், பொறுப்புகளையும், தியாகங்களையும்  வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது!

மெய்யழகன், நன்றி மிக்க ஒருவனின் பெயரைக் கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாததற்காக வருந்தும் மனுதாபிமானத்தை அழுத்தமாகச் சொல்கிறது! 

போகும் இடம் வெகு தூரமில்லை, உயிரும் உடலுங்கூட உரிய நேரத்தில் வழங்கப்படுவதன் மூலம் அடுத்தவரை ஆபத்திலிருந்து காக்கலாம் என்பதை உணர்த்துகிறது!

அயோத்தி, ஆபத்து நேரங்களில் சட்ட திட்டங்களில் சில சலுகைகள் வேண்டுமென்பதை உணர்த்துகிறது!

ம்....! என்ன சொல்லி என்ன? ஒரு படத்தில் சொல்வதைப்போல, மிகவும் தீவிரமாக வாட்ஸ் அப் பில் விவாதித்து விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்கு மாறி விடுவோம்!என்பதுதானே நம் நாட்டு நடப்பு! திரைப்படங்கள் எடுத்துக் கூறும் நல்லவற்றைக் கடைப் பிடிக்க முயல்வோம்! அதுவே நாமும், வீடும், நாடும் சிறக்க வழி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com