
சினிமாவில் நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு வரை தான் அதிக படங்களில் நடிப்பார்கள். அவ்வகையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கஸ்தூரி. திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கஸ்தூரி. இவர் தற்போது காமெடி திரைப்படமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் காமெடி வேடத்தில் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்று சமீபத்தில் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி.
அமைதிப்படை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் நடிகை கஸ்தூரி. இவர் 1991 இல் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் சக்ரவர்த்தி படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் பட்டத்தை வென்றார். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் அதிகரித்தன. சின்னவர், அமைதிப்படை, உடன்பிறப்பு, சின்னமணி மற்றும் இந்தியன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் கஸ்தூரி.
நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவிற்குத் திரும்பிய கஸ்தூரிக்கு அவ்வப்போது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்திருக்கும் கஸ்தூரி, இப்படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது தான் மிகவும் கடினம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்த பிறகு தான் காமெடியாக நடிப்பது அதை விட கடினம் என்று தெரிந்தது கொண்டேன். நடிகையாக பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளேன். ஆனால் பல ஆண்டுகள் சினிமா பயணத்தில் முதல்முறையாக தற்போதுதான் காமெடி வேடத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முதலில் பயந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு, சரி என்று ஒப்புக் கொண்டேன். இப்போது நடித்தும் முடித்து விட்டேன்” என கஸ்தூரி தெரிவித்தார்.
சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தின் அடுத்தடுத்தப் பாகங்கள் வெற்றியடைந்த நிலையில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியாக இருக்கிறது. பேய் படங்களை த்ரில்லராக மட்டுமே பார்த்து வந்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். இதனை சற்று வித்தியாசமாக காமெடி பின்னணியில் காண்பித்தது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படம். பேய் படங்களின் மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது தான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி.
இதன் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடிகை கஸ்தூரி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலரும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, இப்படத்திறகும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.