கோவா சர்வதேச திரைப்பட விழா.. பொன்னியின் செல்வன் 2 தேர்வு.. ஸ்ரேயா, விஜய் சேதுபதி பங்கேற்பு!

கோவா சர்வதேச திரைப்பட விழா
கோவா சர்வதேச திரைப்பட விழா

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. நடிகைகள் குஷ்பு, ஸ்ரேயா, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த நடிகை மாதுரி தீக்ஷித்துக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பானாஜியில் கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நடிகைகள் குஷ்பு, மாதுரி தீக்‌ஷித், ஸ்ரேயா, திவ்யா தத்தா, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய திரைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியமைக்காக இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித்துக்கு, மத்திய அரசின் சிறப்பு விருதை அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவில் எடுக்கப்படும் வெளிநாட்டு திரைப்படங்களின் ஊக்கத்தொகையை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார். அதே நேரத்தில், இந்திய கதைக்களத்தை கொண்டிருக்கும் வெளிநாட்டு படங்களுக்கு மேலும் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என கூறினார்.

திரைப்படம் சிறந்த மொழி என்றும், அதன் மூலம் மக்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார். 9 நாட்கள் நடைபெறும் விழாவில் 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்திய பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் 'விடுதலை', ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை' சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

மெயின்ஸ்ட்ரீம் பிரிவில் மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்", சுதிப்தோ சென் இயக்கிய "தி கேரளா ஸ்டோரி" படமும் இடம்பிடித்துள்ளன. முதல் முறையாக ஓடிடி திரைப்படங்களுக்கும் விருது அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com