
கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம்.
இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அங்கு இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. இதை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியா நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவை காண பார்வையாளர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தற்போது இந்திய ஒளிபரப்பு துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான விடுதலைப் படம் தேர்வாகி உள்ளது.
மேலும் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது. இது மட்டுமல்லாது நீல நிற சூரியன் மற்றும் காதல் என்பது பொதுவுடமை ஆகிய திரைப்படங்களும் தனித்தனியே கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.
தமிழில் வெளியாகி சிறந்த ஆவணப்படம் என்று பாராட்டப்பட்ட பிரவீன் செல்வம் இயக்கிய நன்செய் நிலம், ஆவணப் படங்களுக்கான அரங்கில் திரையிடப்பட உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஆவண படங்கள், குறும்படங்கள் ஆகியவை கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கின்றன.