கோட் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒரு நாயகி, தனது வீட்டில் பணியாற்றி வந்த ஒருவரை அடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த பணியாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், ஸ்னேகா, லைலா, ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் The Goat. மேலும் இதில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருக்கிறார். இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துவிடும். அந்தவகையில், இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த பார்வதி நாயர் மீதுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவர் தமிழில் கமல் ஹாசனின் உத்தம வில்லன், செல்வராகவன் எழுதிய மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, அஜித்குமாரின் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
அந்தவகையில் பார்வதி நாயர் கடந்த 2022ம் ஆண்டு தனது வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போனதாகவும், அதற்கு காரணம் தன் வீட்டில் பணியாற்றிய சுபாஷ் என்பவர்தான் என்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவரும் பார்வதி மீது புகார் அளித்தார். அதாவது பார்வதி நாயர் உட்பட மொத்தம் 7 பேர் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக புகார் அளித்திருந்தார். சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மட்டுமின்றி, சென்னையில் உள்ள சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.
நடிகை பார்வதி நாயர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே சுபாஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஆதாரம் இல்லாமல், எப்படி அவரை அடிக்கலாம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.