நடிகர் ஹிருத்திக் ரோஷன், இன்று அதிகாலையில்(14.07.2023) , நெகிழ்ச்சியான நினைவுக் குறிப்பு ஒன்றை எழுதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார், யாருடைய நினைவாக தெரியுமா? தன் தந்தை வழித் தாத்தாவும், இசையமைப்பாளருமான ரோஷன் நினைவாக. இன்று அவருக்கு 106 வது பிறந்த தினம். பாலிவுட்டின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக இன்றும் கூட நினைவுகூரப்படும் பெருமைக்குரியவர் ரோஷன். ஆனால் அவருக்கு ஆண்டவன் நிறைந்த ஆயுளைத் தர மறந்து விட்டார். ஆம், அவர் தமது 40 வயதில் உடல்நலக்குறைப்பாடு காரணமாக வெகு விரைவில் மரணமடைந்து விட்டார். அவரது பாடல்கள் அப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலமானதைக் கூட அவர் அன்று அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவரது அடியொற்றி பாலிவுட்டில் நீடித்த ரோஷன் குடும்பம் அடுத்த தலைமுறையில் நடிகர் கம் இயக்குநரான ராகேஷ் ரோஷன் (ஹிரித்திக் ரோஷனின் தந்தை) அவருக்குப் பின் அவரது மகனான ஹிரித்திக் ரோஷனுக்கு கிடைத்த மாபெரும் கதாநாயக வெற்றிகள் என்று தொடர்ந்து லைம்லைட்டில் தனது வேர்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டு விட்டது.
தன் தாத்தாவின் 106 வது பிறந்த நாளான இன்று அவர் அடையாமல் இடையில் விட்டுப்போன வெற்றிகள் குறித்து நினைவுக் கூர்ந்து இன்ஸ்டாகிராமில், ஹிருத்திக் ஒரு த்ரோபேக் படத்தைப் பாடலுடன் பகிர்ந்துகொண்டுள்ளார், அத்துடன் அந்தப் புகைப்படத்தின் கீழ் "இன்று எனது தாதுஜியின் 106-வது பிறந்தநாள், அவருடைய பெயரை நான் பெற்றிருக்கிறேன் என்றபோதிலும்... அவரைச் சந்திக்கவோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவோ அல்லது உடல் ரீதியாக அவரது அன்பை அனுபவிக்கும் பாக்கியமோ ஒருபோதும் எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் அவர் மூலமாக நான் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என்றால் அது அவரது திரைப் பணி மற்றும் அவரது இசையால் கிடைத்த பெருமை எனலாம். புராணக்கதைகள் பெரும்பாலும் தங்கள் கலையின் மூலம் காலத்தை கடக்கும் வழியைக் கொண்டுள்ளன. அப்படி அவரது பாடல்கள் ரோஷன் குடும்பத்து திரைப்பயணத்தின் அடித்தளமாக அமைந்ததிலும் மற்றும் அவரது அசாதாரண பரம்பரையின் ஒரு பகுதியாக இருப்பதிலும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார் ஹிரித்திக் ரோஷன்.
இசையில் சிறந்தவரான தன் தாத்தாவுக்கு இன்ஸ்டாவில் பேரன் ஹிரித்திக் பகிர்ந்த நினைவுக்குறிப்பு பதிவைக் கண்ட நெட்டிஸன்கள் பலவாறாக அவரைப் பாராட்டி ஊக்கப்படுத்த தவறவில்லை.
ஹிரித்திக்கின் இன்ஸ்டா பக்கத்தில் , “ எனது தாதுஜியின் அழியாத பாரம்பரியத்தை, எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றின் மூலம் கொண்டாடுகிறேன். இந்தப் பாடலை நான் இன்னும் அதிகமாகக் கொண்டாடுகிறேன் ஏனென்றால் என் தாதுஜி அதன் வெற்றியைக் கொண்டாடவே இல்லை... இந்த அற்புதமான பாடலைப் பதிவு செய்த உடனேயே அவர் காலமானார். அப்போது அவருக்கு 40 வயது," எனும் பதிவைக் காண முடிந்தது
அவர் தனது இடுகையை இணையத்தில் பகிர்ந்த மாத்திரத்தில், ரசிகர்கள் சிவப்பு நிற இதய எமோடிகான்களையும், தீ எமோடிகான்களையும் பறக்க விட்டு கருத்துப் பெட்டிகளை தொடர்ந்து நிரப்பினர். அங்கு "ரோஷன் லெகஸி" என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் "அவர் மிகவும் சிறந்த இசையமைப்பாளராக இருந்தார், அவருடைய சிறந்த படைப்புகளால் அடுத்து வரும் தலைமுறைகள் தூய இசையைக் கற்றுக்கொள்ள முடியும்." "என் அம்மா அப்போதும் அவருடைய இசையின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார்" என்று ஒரு ரசிகர் எழுதினார்.