உன்னத தோழமைகள்!

உன்னத தோழமைகள்!

யாராவது நம்மிடம் வந்து தன்னுடைய சிக்கலைப் பற்றியோ அல்லது பிரச்சினையைப் பற்றியோ சொல்ல வந்தால், நாம் வழக்கமாக செய்பவை:

1.    பல்லியைப்போல் சப்தம் எழுப்புவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ‘அச்சச்சோ’ போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துதல்.

2.    சம்பந்தப்பட்ட விஷயத்தில் தனக்கு அனுபவம் இல்லையென்றாலும், ‘அறிவுரை’ என்ற பெயரில் எதையாவது சொல்லி வைப்பது;

3.    தன் வாழ்க்கையில் நடந்த சம்பந்தமே இல்லாத விஷயத்தை சொல்லத் தொடங்குவது;

உண்மையில், அந்த நபருக்கு இவையெல்லாம் தேவையே இருக்காது. அந்த சமயத்தில் அவருக்கு வேண்டியதெல்லாம், தான் சொல்வதை சற்று நிதானமாக கேட்கும் காதுகளும் மனதும் தான். ஒருவேளை அந்த நபரைப் பற்றி நமக்கு அக்கறை எதுவுமில்லாமல் இருக்கலாம்; அவர் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டாலே போதுமானது. இதுதான் ‘எம்பதி’ (Empathy) என்பதின் முதற்கட்டம்.

            இந்த ‘எம்பதி’ என்னும் கருத்தை மிக தெளிவாக புரியும்படியாக எடுத்து சொல்கிறது, 2022-இல் வெளியான ’Extraordinary Attorney Woo’ என்னும் கொரியன் மொழி சீரியல். கதாநாயகியின் வாழ்க்கையை எந்தவொரு செயற்கைத் தன்மையுமின்றி சாதாரணமாக மிகைப்படுத்தாது விளக்குகிறது. ஒரு சராசரி வழக்கறிஞரின் வாழ்க்கையைப் பற்றிய கதைக்கு ‘Extraordinary’ என்ற வார்த்தையை தலைப்பாக கொடுத்ததற்கான காரணம், அவள் ‘Autism spectrum disorder’ ஆல் பாதிக்கப்பட்டவள். அப்படியென்றால் அவள் ஒரு சின்ன குழந்தை போலல்லவா நடந்துக்கொள்வாள், அவளுடைய பேச்சு யாருக்கும் புரியாதே, அவளால் எப்படி ஒரு வழக்கைக் கையாள முடியும் என்னும் கேள்விக்கு பதிலாக இந்த முழு சீரியல் அமைந்திருக்கிறது. இந்த படம் நெட்பிளிக்ஸில் தற்போது வெளியாகியுள்ளது.

            எம்பதி என்னும் சொல்லிற்கு முதல் உதாரணமாக அமைந்திருப்பது, வூ யங் வூ [Woo Young Woo] என்னும் நாயகியின் தந்தை. மகள் பிறந்த அடுத்த நொடியே தன்னுடைய மனைவி தன்னை விட்டுச் சென்றாலும், படிப்புக்கேற்ற வேலைக்குச் செல்ல முடியாவிட்டாலும், தன் மகள் மற்ற குழந்தைகள் போல் இல்லை என்று தெரிந்த பின்னரும், தன் மகள் மீது துளிக் கூட கோபப்படாமல், அவளை மிகவும் நல்ல முறையில் வளர்க்க முயல்வார். ஒரு சாதாரண உணவகத்தை நடத்தியபடியே அவளுக்குப் பிடித்த துறையில் படிக்கவைத்து, வழக்கறிஞர் ஆக்குவார். மிகவும் சிறப்பான விஷயமே, அவர் அவளுக்காக செய்து கொடுத்த ‘emotion chart’ தான். அதில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு எந்த உணர்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை தன் முகபாவனைகளால் படம் பிடித்து வைத்திருப்பார். தந்தை என்ற ஸ்தானத்தை மீறி தன் மகளுக்கு முதல் நண்பனாக வலம் வரும் மிக அற்புதமான கதாபாத்திரம்.

            அடுத்தது, வூ யங் வூவின் தோழிகள். அவளுடைய பள்ளியிலும் வேலை பார்க்கும் இடத்திலும் அவளின் குறையை காரணமாக வைத்து கேலி செய்பவர்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கும் சிறப்பான தோழிகள். எப்பொழுதாவது, வூ யங் வூ மனதளவில் சோர்ந்து போனாலோ, தன்னுடைய குறையை எண்ணி வருத்தப்பட்டாலோ, அவளுக்கு போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளித்து ஊக்கப்படுத்துவர். ‘இந்த மாதிரி எனக்கொரு தோழனோ தோழியோ இல்லையே’ என்று பார்ப்பவர்களை ஏங்க வைக்கும் கதாபாத்திரங்கள்.

            மூன்றாவதாக, வூ யங் வூ பணிபுரியும் சட்ட நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரியும் நம் கதாநாயகன். வூ யங் வூவை விரும்புவதற்கு முன்னரே அவளிடம் மிகவும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்வான். அவளுக்குப் பிடித்த திமிங்கலங்களைப் பற்றி அவள் பேசும்போது குறுக்கிடாது மிகப் பொறுமையாக கவனிப்பான். அவற்றை நினைவில் வைத்துக் கொள்வான். அவளிடம் எதையும் எதிர்பாராமல் உன்னதமான முறையில் பழகுவான், ஒருவெல்-விஷரைப் [well-wisher] போல. அவளுக்குப் புரியாத சிறு விஷயங்களையும் அதீதப் பொறுமையுடன் கற்றுத் தருவான். அதே சமயம், அவளைப் பற்றி யாராவது குறை கூறினால், வெகுண்டெழுந்து அவர்களின் சட்டைக் காலரைப் பிடித்து விடுவான். பாரபட்சமின்றி எல்லோரையும் மரியாதையுடன் நடத்தி பார்வையாளர்களின் நன் மதிப்பைப் பெற்றவன்.

            கடைசியாக வூ யங் வூவின் டீம் லீடர். முதலில் வூ யங் வூவைப் போன்றவர்களை வழக்கறிஞராக அங்கீகரிக்கத் தயங்கினாலும், பின்னர் அவளுக்கு வேலையில் முழு சுதந்திரமும் ஆதரவும் அளிப்பார். சில நேரங்களில் அவளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பார். எவ்வளவு பெரிய சிக்கலான வழக்காக இருந்தாலும், அவளுடைய ஆர்வத்தையும் அறிவையும் நம்பி அவளிடம் பொறுப்பை ஒப்படைப்பார். வூ யங் வூவை துளியும் காயப்படுத்தாத மற்றொரு சிறந்த கதாபாத்திரம் இவர்.

      மேலும், வழக்கமாக சீரியலில் இருக்க வேண்டிய விஷயங்களில் இருந்து மாறுபட்டு இருப்பவற்றின் பட்டியல் இதோ:

1.    இதில் கதாநாயகி தனி ஒரு ஆளாக பல இன்னல் களுக்குப் பின் சாதிக்கவில்லை; அவள் மீது அன்பும் அக்கறையும் செலுத்தியவர்களின் ஆதரவால்தான்.

2.    முக்கியக் கதாபாத்திரங்களுக்கு மட்டுமின்றி, பல துணைக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

3.    மனிதாபிமானம், அனுதாபம், தனிமனித சுதந்திரம் போன்ற உயர்ந்த கருத்துகளை முன்னிறுத்தப் பட்டிருக்கும்.

4.    Autism – ஆட்டிசம் பற்றிய தவறான கருத்துகளுக்கு பதிலளிக்கப்பட்டிருக்கும்.

5.    கதாநாயகி கையாளும் ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்; ஒன்றைப் போல் மற்றொன்று இராது.

’Extraordinary Attorney Woo’ எனும் இந்த சீரியலில் இன்றைய சூழ்நிலையில் அனைவரும் பார்க்கவேண்டிய படமாக உள்ளது. குறிப்பாக ஆட்டிசம் குறைப்பாடுள்ள குறைத்த விழிப்புணர்வு மற்றும் இந்த வகை குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்க்கை எவ்வாறு அன்பு சூழ் கொண்ட உலகினால் மாற்றம்காண்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு வெற்றிகரமாக கடத்தியுள்ளார் இயக்குநர் மூன் ஜி வோன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com