பார்க்கிங்காக வரும் சண்டை.. ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் ட்ரைலர் எப்படி இருக்கு?

பார்க்கிங் ட்ரைலர்
பார்க்கிங் ட்ரைலர்

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த எல்ஜிஎம் படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் தான் பார்க்கிங். திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சனையை விவரிக்கும் விதமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மனைவி ஐடி வேலை என சாப்டான வாழ்க்கையை வாழும் ஹரிஷ் கல்யாண் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த வீட்டில் ஒரே ஒரு கார் பார்க்கிங் தான் இருப்பதால் பிரச்சனை தொடங்குகிறது.

எனது கார் தான் வீட்டிற்கு உள்ளே நிற்கும் என வாக்குவாதம் செய்கிறார். இதில் எதிர் நபராக எம்.எஸ். பாஸ்கர் தனது நடிப்பால் அசத்தியிருப்பார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் மோதல் வெடிக்க ஹரிஷ் கல்யாண் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுவார். இதில் ஆத்திரமடைந்த எம்.எஸ்.பாஸ்கர் பழிவாங்கும் எண்ணத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இதை ஹரிஷ் கல்யாண் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே கதை. ஒரு கார் பார்க்கிங்கால் வாழ்க்கையே புரட்டி போடும் அளவிற்கு மோதல் ஏற்படுகிறது.இந்த ட்ரைலர் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com