
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
இவர் முதலில் கிடார் வாசிக்க ஆரம்பித்து பின்னர் படிப்படியா கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற 25-ம் மேற்பட்ட பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் 2001-ம் ஆண்டு தன் முதல் படமான 'மின்னலே' மூலம் திரைப்படத் துறையில் நுழைந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘வசீகரா’ பாடல் இன்று கேட்டாலும் இளசுகளை துள்ளாட்டம் போட வைக்கும். இந்த படத்தில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது மட்டுமின்றி சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது.
‘லேசா லேசா’, ‘சாமி’, ‘கோவில்’, ‘காக்க காக்க’, ‘உள்ளம் கேட்குமே’, ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’, ‘சிங்கம்’, ‘என்னை அறிந்தால்’ போன்ற பல முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஷங்கர் இன்று வரை ரஹ்மானுக்கு substitute-டாக (கவனிக்கவும்... replacement அல்ல) கருதியது ஹாரிஸை மட்டும்தான். அந்நியன் திரைப்படத்தில் வரும் மூன்று விதமான கதாபாத்திரங்களுக்கும் மூன்று விதமான இசையைக் கொடுத்திருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இரவுநேர நித்திரை கலக்கத்தில் 'ஹரி கோரி' பாடலை கேட்டுவிட்டு தூங்கச்சென்றால் கொஞ்சமும் கலக்கமில்லாமல் நிம்மதியாக தூங்கலாம். 'பீட்'களும், பின்னணியில் ஒலிக்கும் 'ஹம்'களும் நம்மை கனவுகளுக்குள் தூக்கிச்செல்லும்.
சிறிய இடைவெளிக்கு பிறகு ரவி மோகன் நடித்த ‘பிரதர்' படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெறும் 'மக்காமிஷி' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.
இதற்கிடையில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசைப்பயணம் குறித்த பல விஷயங்களை தெரிவித்திருந்தார். அதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஹாரிஸ் ஜெயராஜ் கூறும்போது, "ஏ.ஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. இசைத்துறையிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு இசையமைப்படுகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை இதுவரை என் பாடல்களில் பயன்படுத்தியது இல்லை. இந்த தொழில்நுட்பத்தால் இருவரை நாம் அவமானப்படுத்துகிறோம். ஒன்று, இல்லாத ஒரு பாடகரை. மற்றொன்று, நம்மை நம்பி பாடவரும் ஒரு பாடகரை. மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இசையமைத்தால் பாடகர்களுக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்காது. இந்த தொழில்நுட்பம் வியப்புதான் என்றாலும், இதனை ஒரு பாடலில் உபயோகிக்கும்போது பாடகர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடுகிறது. அந்தவகையில் பாடகர்களை அவமதிக்கும் தன்மையை கொண்ட ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கட்டாயமாக எப்போதும் எனது இசையில் உபயோகப்படுத்த மாட்டேன்," என்று குறிப்பிட்டார்.