HBD அஞ்சலி June 16 - அழகும் ஆற்றலும் அஞ்சா நெஞ்சமுமானவள் அஞ்சலி!

Happy Birthday Anjali
Happy Birthday Anjali
Published on

சினிமாவில் ஒரு ஹீரோயினை மானே, தேனே, பொன் மானே என்று புகழ்ந்து பாடல்கள் வரும். இன்னும் ஒரு படி மேலே சென்று ஹீரோயின் நிறத்தைப் புகழ்ந்து அத்திப்பழம் சிவப்பா என்று கவிஞர்கள் பாடல்கள் எழுதுவார்கள். இது போன்ற எந்த வர்ணனைகளும் இல்லாமல், ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை, அவள் அப்படி ஒன்றும் கலரில்லை’ என்று ஒரு கதாநாயகிக்காகக் கவிஞர்கள் பாடல்கள் எழுதினார்கள் என்றால் அது ‘அங்காடித் தெரு’ பட அஞ்சலிக்காக மட்டும்தான்.

சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகை என்ற பெயர் பெற்று தென்னிந்திய மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அஞ்சலியின் பிறந்தநாள் ஜூன் 16.

கணிதத்தில் பட்டம் பெற்ற அஞ்சலி நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார். ஆந்திராவின் கோதாவரி பகுதியைப் பூர்வீகமாகக்கொண்ட அஞ்சலி தெலுங்கு சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்தார். 2006ஆம் ஆண்டு... கண்களில் சோகமும், மகிழ்வும் சரியான விகிதத்தில் கடத்தும் ஒரு ஹீரோயினை தேடிக்கொண்டிருந்தார் இயக்குனர் ராம். அஞ்சலி நடித்த தெலுங்குப் படத்தை பார்த்த ராம் ‘இவர்தான் நம் கதைக்கான கதாநாயகி’ மனதில் ஒரு மின்னல் அடிக்க ஆந்திராவிற்குச் சென்று தேடிப்பிடித்து அஞ்சலியை தன் ‘கற்றது தமிழ்’ படத்திற்கு கதாநாயகி ஆக்கினார். இயக்குனர் ராமின் தேர்வு மிகச் சரியாக அமைய, அப்படத்தில் காதலும், சோகமும் கலந்து தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பார் அஞ்சலி.

Angadi theru
Angadi theruImg Credit: Yidio

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள கடைக்கு நாம் எப்போது சென்றாலும், இந்நாளும் ‘அங்காடித் தெரு’ படத்தில் அஞ்சலி ஏற்று நடித்த தனி கேரக்டர் நம் நினைவுக்கு வரும். வசந்த பாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘அங்காடித் தெரு’ படம் அஞ்சலிக்கு பல ஆயிரம் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அஞ்சலிக்கு 2011ஆம் ஆண்டு மிகச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

2009 -2014 காலகட்டங்களில் மாற்று சினிமாவை யோசிக்கும் டைரக்டர்களின் முதல் தேர்வு அஞ்சலியாகதான் இருந்தது.

நீல பத்மநாபன் கதை பின்னணியில் வ.கௌதமன் இயக்கிய ‘மகிழ்ச்சி’ திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்தார். படம் பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை என்றாலும் அஞ்சலி கதாபாத்திரம் பாராட்டப்பட்டது.

சாலை விபத்தை மையப்படுத்தி 2012ஆம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் சில அதிர்வலைகளைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அஞ்சலியின் நடிப்பு முக்கியக் காரணம் என்று இப்படத்தின் இயக்குனர் பல இடங்களில் சொல்லி மகிழ்ந்தார்.

Engaeyum Eppothum
Engaeyum Eppothum

அஞ்சலி வெற்றிக்குக் காரணம் நடிப்பு என்பார்கள் பலர். இந்த நடிப்பை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அஞ்சலி வைத்துக்கொள்வது கிடையாது. அஞ்சலியின் நடிப்பை வேறு எந்த நடிகையுடனும் ஒப்பிடமுடியாது . தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களில் அசாத்திய தனித்துவமான நடிப்பைத் தருவதில் திறமைசாலி அஞ்சலி. அந்தத் தனித்துவத்தின் வாயிலாக, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அஞ்சலி.

கல்லானாலும் கணவன் என்ற மரபை உடைத்து தீயவனான தனது கணவன் இறந்துபோன பின்பு சுதந்திர உலகத்தை அனுபவிக்கும் ‘இறைவி’ படக் காட்சியில் பல சராசரி பெண்களின் பிரதிபலிப்பாக இருந்தார்.

‘பேரன்பு’ படத்தில் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டர், சுந்தர்.சியின் ‘கலகலப்பு’ படத்தில் சிறிது கிளாமர் கலந்த காமெடி கேரக்டர் என படத்திற்குப் படம் மாறுபட்ட நடிப்பைத் தருவதில் திறமையானவர் அஞ்சலி.

ஏறுமுகமாக இருந்த அஞ்சலியின் சினிமா பயணம் 2016க்கு பின்பு ஒரு பிரபல இயக்குநரின் குறுக்கீட்டால் சற்றே இறங்குமுகமாக மாறியது. அந்தக் குறிப்பிட்ட இயக்குனருடன் ரகசியத் திருமணம், அஞ்சலியின் அம்மா என்று அறியப்பட்டவர் உண்மையில் அஞ்சலியின் அம்மா அல்ல என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கின . இதனால் தமிழ் சினிமாவைவிட்டு ஒதுங்கினார் அஞ்சலி. தன் தாய்மொழியான தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: வெப்பன் - கட்டப்பாவுக்கு வந்த சத்திய சோதனை!
Happy Birthday Anjali

அஞ்சலி மீண்டும் திரையில் தோன்ற மாட்டாரா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் செகண்ட் இன்னிங்சை ஓ டி டி தளத்தில் ஆரம்பித்தார். சுதா கொங்காரா, வெற்றி மாறன் இயக்கிய பாவக்கதைகள் என்ற வெப் தொடரில் நடித்து தமிழ் மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் புகுந்தார்.

Fall series
Fall series

2022ல் அஞ்சலி நடிப்பில் வெளியான ‘fall’ என்ற வெப் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அஞ்சலியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தத்தொடரில் அஞ்சலியின் நடிப்பு மிக அமைதியாகவும் ஆழமாகவும் இருக்கும்.

தமிழில் இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அஞ்சலி. தமிழில் பல படங்களுக்கு பிலிம் பேர் விருதுகளையும், தெலுங்கில் இரண்டு முறை நந்தி விருதையும் பெற்றிருக்கிறார்.

தற்சமயம் அதிக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. கடந்த வாரம் தெலுங்கு படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா அஞ்சலியை மேடையில் விளையாட்டாகத் தள்ளிவிட்டது மீடியாவில் பேசுபொருளானது.

கடந்த பத்தாண்டுகளில் ஹீரோயின்களில் அதிக அளவு தனிப்பட்ட வாழ்க்கைக்காக கிசுகிசுக்கப்பட்டவர் அஞ்சலியாகத்தான் இருப்பார். இதை எல்லாம் மீறி ஒரு பீனிக்ஸ் பறவைபோல எழுந்து நிற்கிறார் அஞ்சலி.

ஆந்திராவின் கோதாவரி கரையிலிருந்து சாவித்திரி, ஜமுனா, பானுமதி என பல திறமை வாய்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளனர். இந்த வரிசையில் இந்தத் தலைமுறைக்கு ஆந்திரா தந்த நடிப்பு சூறாவளி அஞ்சலி என்று உறுதியாகச் சொல்லலாம்.

அஞ்சலி பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக அதிகம் நடித்ததில்லை. பெரிய இயக்குநர்கள் அஞ்சலிக்கு வாய்ப்பு தர வில்லை. இருந்தாலும் அஞ்சலி தனது நடிப்பால் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிற்கிறார் என்றால் அது மிகையாகாது.

மீண்டும் தமிழ்த்திரையில் என்ட்ரி தர அஞ்சலி கதைகள் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கோதாவரி தந்த கலைச்செல்வி அஞ்சலி மீண்டும் தமிழில் ஒரு ரவுண்ட் வர இந்தப் பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com