நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களின் வாகனங்களை வேறு பாதையில் போலீசார் திருப்பி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதே போன்று இன்றும் ஏழுமலையானை காண ஏராளமான பொதுமக்கள் திருப்பதிக்கு படையெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதனால் படப்பிடிப்பில் எந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என படக்குழு கேட்டுக்கொண்டதால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பவுன்சர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஷூட்டிங் காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களை போலீசார், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பிவிட்டனர். போக்குவரத்தை மாற்றியமைக்கும் பணியில் பவுன்சர்களும் ஈடுபட்டிருந்தனர். இதனால் பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகினர். ஷூட்டிங்கிறாக பொதுமக்களை சிரமப்படுத்துவதா என பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
தொடர்ந்து ஷூட்டிங் முடிந்த பிறகு போலீசார் போக்குவரத்தை சரி செய்து அலிப்பிரி பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியளித்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்த பட ஷூட்டிங்கில் தனுஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார். இன்னும் 2 நாட்கள் ஷூட்டிங் தொடர்வதால் நாளையும் போக்குவரத்து பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.