ஹிப் பாப் தமிழா ரிட்டன்!

ஹிப் பாப் தமிழா ரிட்டன்!
Published on

கோவையிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் அதிரடியாக நுழைந்து நடிப்பு, இசை, இயக்கம் நடனம் என பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் ஆதி. ஹிப் பாப் இசையில் புகழ் பெற்றவர் என்பதால் ஹிப் பாப் ஆதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மீசையை முறுக்கு, நட்பே துணை என வெற்றி படங்களை தந்தவர் நடுவில் சில நாட்கள் அமைதியாக படங்களில் நடிக்காமல் இருந்தார். காரணம் படிப்பில் டாக் ரேட் செய்து கொண்டிருந்தார். தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய சரவன் இயக்கத்தில் வீரன் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார் ஆதி. ஆதிக்கு வில்லனாக ஸ்டைலிஷ் வில்லன் வினய் நடிக்கிறார். முனீஷ் காந்த், காளி வெங்கட் காமெடியில் கலக்குகிறார்கள். இந்த வீரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நமது கல்கி உட்பட சில பத்திரிகையாளர்களிடம் ஆதி படம் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். " சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களை போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். தியாகராஜன் சாருடைய இரண்டாவது மகன் அர்ஜூன் எனக்கு நல்ல நண்பர். அவர் 'நட்பே துணை' சமயத்தில் இருந்து அடுத்தடுத்து எங்களுக்கு படம் செய்து தர வேண்டும் என்று கேட்டார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை மிகப் பெரியது. அவருக்கும், சந்திக்கும் போதெல்லாம் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் தியாகராஜன் சாருக்கும் நன்றி. அடுத்து இயக்குநர் சரவன். எனக்கு 'இன்று நேற்று நாளை' சமயத்தில் இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகம். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில் தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தினோம். கிட்டத்தட்ட இந்த பயணத்தில் ஆறு மாதங்கள் என்னுடனே அவரும் உடன் இருந்தார். வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு சரவனும் ஒருவர். இதற்கு அடுத்தும் தொடர்ந்து வேலை செய்வோம் என்று காத்திருக்கிறேன். இந்த படம் மூலம் அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். இந்தப் படத்தின் சூப்பர் வில்லன் வினய் அண்ணன். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. இன்று தமிழ் சினிமாவில் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துக் கொண்டிருக்கும் காளி அண்ணனும், முனீஸ்காந்த் அண்ணனும் இந்த படத்தின் நகைச்சுவைக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறுமேயானல், அவர்களுடைய பங்கும் மிகப் பெரியது. ஆதிரா கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார்.

புதிய திறமைகளை ஒவ்வொரு படத்திலும் எடுத்து வருவதை நாங்கள் எங்களுடைய பாக்கியமாக கருதுகிறோம். அந்த வகையில் இந்த படத்தில் சசி, அவருடைய நக்கலைட்ஸ் டீம், டெம்பிள் மங்கி என அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி. இந்த படம் எடுக்கப்பட்டது மூன்று மாத காலத்தில் என்றாலும், அதற்கு முன்பு ஒரு ஆறு மாத காலம் குதிரை பயிற்சியில் 'முடியும் முடியும்' என்று எனக்கு உத்வேகம் கொடுத்த மாஸ்டர் அப்பு, ஜான் அவர்களுக்கு நன்றி. 'சிங்கிள் பசங்க', 'கேரளா டான்ஸ்' என என்னுடன் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்த சந்தோஷ் மாஸ்டர் தான் இதற்கும் நடனம் அமைத்திருக்கிறார். இந்த கதைக்கு அந்த மண்சார்ந்த நடன அசைவுகள் நிறைய ஒர்க் செய்து எங்களுக்கும் அதை சொல்லிக் கொடுத்தார். இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. மண் சார்ந்த ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற உடைகளை கீர்த்தி நிறைய டிரையல் செய்து எடுத்து வந்தார். இதுபோல படத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்த பணியை கொடுத்துள்ளனர். என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என இவை வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் எனக்கு 90'ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும் நாஸ்டலஜியா. இப்போது, ஸ்கூல் திறப்பு தள்ளி போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த 'வீரன்' படத்தை கொண்டு வந்து காண்பிக்கலாம். அவர்களுக்கு இன்னும் ஒரு 10 வருடம் கழித்து 'வீரன்' ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும். படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்று கூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்கள் பரிசோதித்து இருக்கிறோம். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்" என்றார். இதுவரை இளைஞர்களின் அடையாளமாக இருந்த ஹிப் பாப் ஆதி குழந்தைகளுக்கு பிடித்த ஆதியாக மாறப்போகிறார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com