ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸுக்கு அரிய வகை டிமென்ஷியா தாக்கம்… குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லீஸ், ஃபிரான்டோடெம்போரல் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.
அஃபாசியாவுடனான (அஃபாசியா என்பது ஒரு மனிதனின் பேச்சுத்திறன், உரையாடல், எழுதும் திறனில் படிப்படியாக மோசமான விளைவுகளை ஏற்படக்கூடிய ஒரு வகை நோய்க்குறைபாடு, இது மூளையின் ஒரு பகுதி செயல் திறன் குறைவதால் ஏற்படும்) அவரது போரை அறிவித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, முன்னாள் மனைவி டெமி மூர், தற்போதைய மனைவி எம்மா ஹெமிங் மற்றும் அவரது ஐந்து மகள்கள் உட்பட நடிகரின் குடும்பத்தினர், அசோசியேஷன் ஃபார் ஃப்ரண்டோடெம்போரல் டிஜெனரேஷன் இணையதளத்தில் ஒரு அறிக்கையில்அவரது தற்போதைய உடல்நலக் குறைபாடு பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.
"இது வேதனையாக இருந்தாலும், இறுதியாக ஒரு தெளிவான நோயறிதலைப் பெறுவது ஒரு நிவாரணம்" என்று அவரது குடும்பத்தினர் கூறியதுடன், வில்லிஸின் நிலை கடந்த ஆண்டில் மிகவும் மோசமடைந்தது என்பதையும் தெரிவித்திருந்தனர்.
"FTD என்பது நம்மில் பலர் கேள்விப்பட்டிராத மற்றும் யாரையும் தாக்கக்கூடிய ஒரு கொடூரமான நோயாகும். 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு, FTD டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமாக வெளிப்படுகிறது, மேலும் நம்மை இந்த நோய் தாக்கும் போது நோயைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கே பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், FTD என்பது நமது நோயறிதலைக் காட்டிலும் அதிவேகமாகவும் அதிகமாகவும் பரவுகிறது... என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். “
- என்கிறார்கள் புரூஸ் வில்லிஸ் குடும்பத்தினர்;
வில்லிஸ், மார்ச் 2022 ல் தனது 67 வயதில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த நேரத்தில் வில்லிஸ் "சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் ... இது அவரது அறிவாற்றல் திறன்களை பாதிக்கிறது" என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
கனடாவின் அல்சைமர் சொசைட்டியின் கூற்றுப்படி, FTD என்பது ஆளுமை மற்றும் நடத்தையுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளை பாதிக்கும் அரிய நோய்க்குறைபாடுகளின் குழுவைப் பற்றி பொதுவாக குறிப்பிடக்கூடிய கூட்டுப் பெயராகக் கருதப்படுகிறது.
மொத்த டிமென்ஷியா வழக்குகளில் தோராயமாக 5 முதல் 10 சதவிகிதம் வரை FTD குறைபாடு தான் முதன்மை வகிக்கிறது, ஆனால் 65 வயதிற்குட்பட்டவர்களில் கண்டறியப்பட்ட இளம் தொடக்க டிமென்ஷியாவில் இது 20 சதவிகிதம் ஆகும்.
FTD நடத்தை மாற்றங்கள், பேச்சு மற்றும் இயக்கத்தில் சிரமம் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அல்சைமர் சொசைட்டி கூறுகிறது.
அல்சைமர் நோயைப் போலல்லாமல், ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா உள்ளவர்கள் பெரும்பாலும் நேரத்தைப் பற்றி விழிப்புடன் இருப்பார்கள் (உதாரணமாக, அது எந்த ஆண்டு), இதில் நோயின் ஆரம்ப கட்டங்களில் நினைவாற்றல் கவலைக்குரியது அல்ல.
பிந்தைய கட்டங்களில், குழப்பம் மற்றும் மறதி உட்பட டிமென்ஷியாவின் பொதுவான அறிகுறிகள் எழலாம். மோட்டார் திறன்கள் இழக்கப்பட்டு விழுங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்த உலகில் இந்த நோய்க்கு சிகிச்சையே கிடையாது. என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் என்கிறார்கள் புரூஸ் வில்லிஸ் குடும்பத்தினர்.
"புரூஸ் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக எப்போதுமே தன் குரல் முதல் குரலாக ஒலிக்க வேண்டும், பதிவாக வேண்டும் என்று நம்புவார். மேலும் பல முக்கியமான விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து பேசி பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். இன்றும் கூட இந்த நோய்க்குறைபாடு விஷயத்தில் அவரால் முடிந்தால், உலகளாவிய கவனத்தையும் ஒரு இணைப்பையும் கொண்டு வந்து இந்த நோய் குறித்து அவர் பதிலளிக்க விரும்புவார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த பலவீனப்படுத்தும் நோயைக் கையாள்பவர்களை, நோயால் அவதிப்படுபவர்களை இந்த உலகம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பல தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த நோய் எவ்வாறு பாதிக்கிறது? என்பது குறித்தெல்லாம் அவர் நிறையப் பேசி இருக்கவும் கூடும்."
- என்று புரூஸ் வில்லிஸ் குடும்பத்தினர் அவரது நோய்க்குறைபாடு குறித்து தெளிவாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.