கணேசமூர்த்தி என்பவர் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். கணேசனின் நடிப்பு திறமையைக் கண்டு மெச்சிய பெரியார், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். அதிலிருந்து அந்தப் பெயரே நடிகர் திலகத்துக்கு நிலைத்துவிட்டது.
1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சிவாஜி கணேசன்.
முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியதோடு நிறைய பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
அந்தக் காலத்தில் சினிமா பத்திரிகைகளில் முன்னணியில் இருந்த ‘பேசும் படம்’ பத்திரிகை ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களில் சிறந்த படங்களைத் தேர்வு செய்து, இம்மாத நட்சத்திரம் என்று குறிப்பிட்டு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ‘பராசக்தி’ படம் வெளியானதும் ஆசிரியர் சம்பத் குமார் என்பவர் ‘வரும் காலங்களில் இவர் பெரும் நட்சத்திரமாக உருவெடுப்பார்’ என்றும், ‘இம்மாத நட்சத்திரம் சிவாஜி’ என்றும் குறிப்பிட்டு பத்திரிகையில் எழுதினார்.
நடிகர் திலகம் என்ற பட்டம் எப்படி வந்தது?
ஒருநாள் பேசும் படம் பத்திரிகைக்கு இரண்டு வாசகர்கள் கடிதம் எழுதி இருந்தனர். அதில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ‘நடிகர் திலகம்’ என்ற பட்டம் வழங்கி விழா எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு வேண்டி, அத்துடன் அதற்காக அவர்களால் முடிந்த சிறு தொகையும் அனுப்பி இருந்தனர்.
அதற்குப் பிறகு ஆசிரியர் அவர்கள் பத்திரிகையில் வெளியாகும் கட்டுரைகளில் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ என்றே குறிப்பிட்டு
எழுத ஆரம்பித்துவிட்டார். அந்த இரண்டு வாசகர்கள் அனுப்பியிருந்த பணத்தையும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். ‘நடிகர் திலகம்’ என்ற அடைமொழி சிவாஜிக்கு அமைந்துவிட்டது.
நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் வந்த சிவாஜியின் முதல் படம் ‘அம்பிகாபதி’.
நடிகர் திலகத்தின் பரந்த மனது:
ஒரு முறை தமிழக அரசு நடிகை வைஜெயந்தி மாலாவுக்கும், மதுரை சோமுவுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அச்சமயம் வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு மாதம் ரூபாய் 500 மட்டுமே உதவித்தொகை வழங்கியது.
நேர்மையின் சிகரமான கக்கன் அவர்கள் கடைசி வரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு சிவாஜி கணேசன், சேலம் நேரு கலையரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தில் நடித்து, அதில் கிடைத்த தொகை முழுவதையும் நிதியாக வழங்கியதுடன் தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியையும் அளித்தார்.
அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்தான் இதோ: