2024 ஆம் ஆண்டு , அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் , புஷ்பா 2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியாக, அல்லு அர்ஜூன் மற்றும் படக் குழுவினர் ஹைதராபாத் ஆர்.டி.சி எக்ஸ் ரோட்டில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வருகை தந்தனர். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அந்த நேரத்தில் நடந்த நெரிசலில் சிக்கி 35 வயதுமிக்க ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்தார், மேலும் அவரது 9 வயது மகன் ஶ்ரீ தேஜ் படுகாயமடைந்தார்.
ஶ்ரீதேஜ் நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்து , அதன் பின் குணமடைந்தார். நாடு முழுவதும் இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.. இந்த விபத்து தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கில் மொத்தம் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சிக்கடப்பள்ளி போலீசார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் நடிகர் அல்லு அர்ஜுன் பெயர் 11-வது குற்றவாளியாக (A-11) சேர்க்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில்,சந்தியா தியேட்டர் நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு பெரிய நடிகர் வரும் போது , அவருக்கு கட்டுக்கடங்காமல் கூட்டம் சேரும் வாய்ப்பு உள்ளதால் , தியேட்டர் நிர்வாகம் போதுமான அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவசர கால வெளியேறும் வழியினை திறந்து வைத்திருக்க வேண்டும்.
அல்லு அர்ஜூன் மீது " தனது வருகையை முன்கூட்டியே தெரிவிக்காமல் இருந்ததற்கும், அவரது பவுன்சர்கள் மற்றும் உதவியாளர்கள் ரசிகர்களைத் தள்ளி நெருக்கடியை ஏற்படுத்தியதற்கும் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் A-11 ஆகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மேலாளர், ஊழியர்கள் மற்றும் 8 பவுன்சர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்குப் பின், அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹1 கோடி நிதியுதவி வழங்கினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் சுகுமார் இணைந்து ₹1 கோடி வழங்கினர். மொத்தமாக ₹2 கோடி நிதியுதவி தில் ராஜு மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் வழங்கப்பட்டது. சிறுவனின் மருத்துவ செலவையும் அல்லு அர்ஜூன் ஏற்றுக் கொண்டார்.
இந்த வழக்கு தற்போது நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுன் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் 11-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.