நான் எனது மனைவியின் செல்ல விசிறி!

பாலிவுட் பூமராங்
நான் எனது மனைவியின் செல்ல விசிறி!

மீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகான் இருவரும் கவுரிகான் எழுதிய ‘மை லைஃப் இன் டிசைன்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டனர். இப்புத்தகத்தில், மும்பை பாந்த்ரா பகுதியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் அவர்களது பங்களா ‘மன்னத்’ தின் உட்புறத் தோற்றம்; பல்வேறு வசதிகள்; அதன் உருவாக்கம் போன்ற விபரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டிற்குப் பின் பேசிய ஷாருக்கான், ‘மன்னத்’ வீட்டை வாங்கியபோது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“எங்களுக்காக சொந்த வீடு வாங்கியபோது அது பாழடைந்த நிலையில் இருந்தது. அதைப் புதுப்பிக்கத் தேவையான பணம் எங்களிடம் இல்லை. எனினும் வீட்டைப் புதிதாக வடிவமைத்துக் கட்ட டிசைனர் ஒருவரை அழைத்துக் கேட்க, அவர் விளக்கிக் கூறினாலும், கேட்ட தொகை அதிகமாக இருந்தது. அதைக் கொடுக்க வசதியில்லாத காரணம், கவுரியை டிசைன் செய்யச் சொல்ல, அவரும் ஆரம்பித்தார்.

அன்றைய காலகட்டத்தில் தினசரி ஷூட்டிங் சென்று சம்பாதித்த பணத்தில் வருடம் முழுக்க தேவையான பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே முடிந்தது. எங்கள் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் கவுரிகான் டிசைன் செய்ததோடு, தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கும் இன்டீரியர் டிசைன் செய்து கொடுத்து வருகிறார். இதற்காக அதிகமாக பணம் வாங்குவது கிடையாது.

கவுரிக்கு வயசு 14, எனக்கு வயசு 18 ஆக இருக்கையிலேயே ஒருவருக்கு ஒருவர் மிகவும் தெரிந்தவர்களாக ஆகிவிட்டோம். கவுரிக்கு வயசு 40 ஆகையில் இண்டீரியர் டிசைனராக தொழிலைத் தொடங்கியது எனக்குப் பெருமையாக இருந்தது. எங்களுடைய திருமணம் சீக்கிரமாகவே முடிந்த காரணம், இண்டீரியர் டிசைன் படிப்பைத் தொடர இயலாமல் போனாலும், பின்னர் அவரது கனவை பாடுபட்டு நிறைவேற்றிக்கொண்டார்.

இளைஞர்கள் உள்பட அனைவரும் எப்போதும் தங்களது கனவைக் கைவிடாமல் முயற்சி செய்வது அவசியம். ஒருவேளை தவற விட்டிருந்தால், எந்த வயதிலிருந்தும் அதைத் தொடங்கி உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நான், எனது மனைவியின் JABRA FAN என்பதில் பெருமைப்படுகிறேன். எங்களது குடும்பத்திலேயே மிகவும் பிஸியான பெண்மணி அன்பு மனைவி கவுரியே ஆவார்.

“ரூபாய் 333 கோடி இழப்பு!”

பி.வி.ஆர் நிறுவனம் நாடு முழுவதுமுள்ள ‘ஐநாக்ஸ்’ தியேட்டர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் சில படங்கள் நன்கு ஓடினாலும், பல பாலிவுட் படங்கள் தோல்வியைக் கண்டன. ஓடிடியின் வளர்ச்சியே தோல்விக்கான காரணம் என கூறப்படுகிறது.

சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கு மக்கள் அதிகம் வருவதில்லை. அவைகள் மூடப்பட்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாக அதிகரித்தன. இப்போது இவைகளுக்கும் மக்கள் வரத் தயங்குகின்றனர். புதுப்படங்கள் தியேட்டர்களுக்கு வந்த இரண்டு வாரத்திலேயே ஓடிடியில் வந்துவிடுகின்றன. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் பாப்கார்ன் விலைகளும், பார்க்கிங் கட்டணமும் ஜாஸ்திதான்.

கடந்த காலாண்டில் மட்டும் பி.வி.ஆர் – ஐநாக்ஸ் தியேட்டர்கள் ரூபாய் 333 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. இதன் காரணம் நாடு முழுவதுமுள்ள ஆயிரம் தியேட்டர்களில் முதல் கட்டமாக 50 தியேட்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும் ஆறு மாத காலத்திற்குள், இந்த 50 தியேட்டர்களை மூட இக்குழுமம் முடிவு செய்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், மேலும் பல பி.வி.ஆர் – ஐநாக்ஸ் தியேட்டர்கள் மூடப்படலாம் என திரையுலகினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com