380 படங்கள் நடித்துள்ளேன்… அதில் 200 படங்களை நானே பார்த்ததில்லை – நடிகர் மிதுன் சக்ரவர்த்தி!
இந்தியத் திரையுலகின் 'டிஸ்கோ கிங்' என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, தான் இதுவரை நடித்த படங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றைத் தான் பார்த்ததில்லை என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 380 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இந்த ஜாம்பவான் நடிகர், தனது சினிமா பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
1976 ஆம் ஆண்டு "மிருகயா" படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த மிதுன் சக்ரவர்த்தி, தனது தனித்துவமான நடனம் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தி, பெங்காலி, ஒரியா, போஜ்பூரி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், யாகவராயினும் நா காக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
"டிஸ்கோ டான்சர்", "டான்ஸ் டான்ஸ்", "சுவர்க் சே சுந்தர்", "குண்டா" போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இந்தி மட்டுமின்றி, பெங்காலி, ஒடியா, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். மூன்று தேசிய விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், ஒரு சமீபத்திய நேர்காணலில், மிதுன் சக்ரவர்த்தி, "நான் இதுவரை சுமார் 380 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அதில் சுமார் 200 படங்களை நானே பார்த்ததே இல்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் இவர் நடித்த படங்களில் 180 படங்கள் ஃப்ளாப் ஆகின. 1990களில் இவரது 33 படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகர் தான் நடித்த படங்களில் பெரும்பாலானவற்றை பார்க்காமல் இருப்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஒருவேளை, அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால், அவருக்கு நேரம் கிடைக்காமல் போனதா அல்லது சில படங்களின் மீது அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஆர்வம் இல்லையா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.
மிதுன் சக்ரவர்த்தியின் இந்த கருத்து, அவரது தொழில் மீதான அவரது அணுகுமுறையையும், ஒரே நேரத்தில் பல திட்டங்களில் பணிபுரியும் அவரது திறமையையும் காட்டுகிறது. அவர் தனது கலைப் பயணத்தில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதையும் இது பறைசாற்றுகிறது.
பத்ம பூஷன் விருது வென்ற இவர், சமீபத்தில் தாதா சாகிப் பால்கே விருதையும் வென்றார். இவர் 400 கோடி சொத்துக்களின் சொந்தக்காரர். தமிழ்நாடு உட்பட பல இடங்களில் இவருக்கு சொந்த இடம் உள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.