

மிக நீண்ட காலமாக இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் , ஆடியோ நிறுவனங்களுக்கும் இடையில் சில வழக்குகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனாலும் சரிகம நிறுவனம் தொடந்துள்ள வழக்கு, இளையராஜாவிற்கு சிறை தண்டனை வழங்கவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி கடுமையான வாதங்களை முன் வைத்துள்ளது.
தென்னிந்தியா முழுவதும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புகழ்பெற்ற இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வருகிறார். அதுபோலவே இந்தியாவின் முன்னணி இசை வெளியீட்டு நிறுவனமாக சரிகம இருந்து வருகிறது. இவர்களுக்கு இடையில் பதிப்புரிமை தொடர்பான வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மோதல் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பதிப்புரிமைச் சட்டத்தின்படி, திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து , சட்டபூர்வமாக ஒப்பந்தம் செய்து திரைப்பட இசைக்கான முழு தொகையையும் கொடுத்து முறையாக, பதிப்புரிமையை பெற்றுள்ளதாகச் சரிகம நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் , இளையராஜா இசையமைத்துள்ள 134 திரைப்படங்களின் பதிப்புரிமையை பெற்றுள்ளதாக கூறி, அதை இளையராஜா சார்பில் பயன்படுத்த தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி , இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவும், உரிமை கொண்டாடவும், அதன் உரிமையை வேறு யாருக்கும் விற்பனை செய்யவும், இளையராஜாவிற்கு இடைக்கால தடை விதித்தது.
இளையராஜா சார்பில் இந்த தடையினை எதிர்த்து மேல் முறையிட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை கடந்த ஜூலை 1 ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, முந்தைய இடைக்கால தடையை தொடர அனுமதித்தது. உயர் நீதிமன்றத்தின் தடையினை மீறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா சார்பு பட்டியல்களின் கீழ் அந்த பாடல்கள் இயங்கி வருகின்றன என்று சரிகம நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில், இளையராஜாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
சரிகம நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் இளையராஜாவின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை கோரியுள்ளது. அவர்களின் கோரிக்கையாக , இளையராஜாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும். பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை, தங்களுக்கு இழப்பீடாக கிடைக்கும் வகையில், ஒரு சிறப்பு அதிகாரியையும் உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல், அவமதித்த குற்றத்திற்கு இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சரிகம நிறுவனத்தின் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்குமாறு கூறி, இளையராஜா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இளையராஜா அடிக்கடி பதிப்புரிமை சார்ந்த வழக்குகளை சந்தித்து வருவது ஒரு சாதாரணமான விஷயம் என்றாலும் , அவரை சிறையில் அடைக்க கோரியும் , அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரிய மனு தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.