இசைஞானி இளையராஜாவின் இசைக் குடும்பத்தில் மயக்கும் மெல்லிசையாய் 1976-ஆம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி.
பவதாரிணி முதன் முறையாக தமிழ் சினிமாவில் பாடிய பாடல் மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் தான். சிறு குழந்தை போல தனித்துவமான குரலில் ஒலிக்கும் இந்த பாடல் பலரின் பேவரைட் ஆகும். தொடர்ந்து ப்ரெண்ட்ஸ் படத்தில் ஹிட்டான தென்றல் வரும் வழியை பாடலையும் இவர் தான் பாடினார். தொடர்ந்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடலையும் பாடி அசத்தினார்.
பாரதி படத்தில் வரும் மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும். மேலும் தாமிரபரணி படத்தில் தாலியே தேவையில்ல என்ற பாடலையும் பாடினார். 2005-இல் இவர் பாடிய காற்றின் வரும் கீதமே பாடல் பலரின் மனதை வருடியது. இது போன்று 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மிகச்சிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தார் பவதாரிணி. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பாடியுள்ள பவதாரிணி, நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ர் மை பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரானார். பிர் மிலேங்கே, இலக்கணம், மாயநதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து அசத்தியுள்ளார்.
சுசிலா தொடங்கி ஜானகி மற்றும் சித்ரா வரை திரைப்பாடல்களில் வெற்றிக்கொடி நாட்டிய ஜாம்பவான்களுக்கு இடையே, தனித்துவம் மிக்க குரலால் அனைவரையும் கவர்ந்திழுத்தார் பவதாரிணி.
பண்ணயபுரம் வாரிசுகளான இவர்களின் குடும்ப பாடலாக கோவா படத்தில் இடம்பெற்ற ஏழேழு தலைமுறைக்கும் பாடல் அமைந்தது. அதில், சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக பாட, செல்ல சகோதரி பவதாரிணியும் அதில் தனது இனிமையான குரலை பதிவு செய்து இருப்பார்.
மெல்லிசையாக இவரின் குரல் நம்மை வருடுவதை போல, இவரின் மரணமும் நம் மனதை வருடுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 6மாத காலமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து, ஒளியில் ஒலியாய் கலந்துவிட்டார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.