எகிறும் எதிர்பார்ப்பு: முதன்முறையாக இசைஞானியுடன் இணையும் மாரி செல்வராஜ்!

Manjnathi film update
ilayaraja and Mari selvaraj
Updated on

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்துக் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், தன்னுடைய அடுத்த படைப்பான 'மஞ்சணத்தி' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். இளையராஜா தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இசையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். அவர் பல மொழிகளில் 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனையும் செய்தவர்.

இளையராஜாவும் மாரி செல்வராஜும் முதல் முறையாக இணையும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் இசைக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முன்னர் மாமன்னன் திரைப்படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர் மாரி. இளையராஜாவுடன் பணிபுரியும் இந்த வாய்ப்பை மாரி செல்வராஜ் "தனது நீண்ட நாள் கனவு நனவான தருணம்" என்று நெகிழ்ச்சியோடு வர்ணித்துள்ளார்.

Summary

இளையராஜா மற்றும் மாரி செல்வராஜ் சந்திப்பு குறித்து படக்குழுவினர் ஒரு சிறப்பு காணொளி வெளியிட்டுள்ளனர். அந்த காணொளியில் மாரி செல்வராஜ் இளையராஜாவின் இல்லத்திற்குச் சென்று, அவரிடமிருந்து ஆசி வாங்கிய காட்சிகளும், மாரி செல்வராஜ் காட்சிகளை விவரிப்பதற்கு ஏற்ப இளையராஜா இசையை உருவாக்குவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

மேலும் அந்தக் காணொளியில் மாரி செல்வராஜின் பழைய நேர்காணல் ஒன்றும் இடை சொருகப்பட்டிருந்தது. அதில், "என்றாவது ஒருநாள் நான் இளையராஜா சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று அவர் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அவரது ஆசை பல ஆண்டுகள் கழித்து நிஜமாகியுள்ளது.

மாரி செல்வராஜ் அந்தக் காணொளியில் ​"இளையராஜாவின் இசை எனது வாழ்க்கை மற்றும் குழந்தைப்பருவ நினைவுகளோடு மிகவும் ஆழமாக தொடர்பு கொண்டுள்ளது" என்பதை தெரிவித்துள்ளார். அவரிடம் பணியாற்ற வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளார். ஆனாலும், அவரிடம் பணிபுரியும் முன்னர் , தான் பக்குவப்பட்ட ஒரு திரைப்பட இயக்குநராக மாற வேண்டும் என்று காத்திருந்துள்ளார்.

அந்த இணையும் சந்தர்ப்பத்தில் தகுதியான கதையுடன் இருக்க வேண்டுமென்று எண்ணியுள்ளார். அந்த சந்தர்ப்பம் மஞ்சணத்தி திரைப்படம் மூலம் நிறைவேறுகிறது.இந்த தருணத்தை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தும் மாரி செல்வராஜ் ​"இளையராஜா சாருடன் இணைந்து எனது வாழ்வின் புதிய பக்கங்களை எழுதத் தொடங்கியுள்ளேன்; இந்தக் கூட்டணி என் இதயத்தின் சிம்பொனி " என்று நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

மஞ்சணத்தி திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் காயாடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளனர். மாடர்ன் திரைப்படங்களில் நடித்துள்ள இவர்கள் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இத்திரைப்படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் மற்றும் ஃபார்ச்சூன் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.

​பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மாரி செல்வராஜ் அதன் பின்னர் கர்ணன் , மாமன்னன் , வாழை , பைசன் ஆகிய திரைப்படங்களை அடுத்து ஆறாவது திரைப்படமாக மஞ்சணத்தியை இயக்குகிறார்.

logo
Kalki Online
kalkionline.com