மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

Manjumel Boys and Ilayaraja
Manjumel Boys and Ilayaraja
Published on

தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ஹிட்டான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் படக்குழுவினருக்கு இசைஞானி இளையராஜா நோட்டிஸ் அனுப்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பறவா பிலிம்ஸ் சார்பில் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்தனர். சௌபின் சாகிர், ஸ்ரீநாத், கணபதி, தீபக் பரம்பொருள் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம், 200 கோடி வசூலை ஈட்டியது.

இப்படம் கமலஹாசன் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் வரும் குணா குகையின் உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவான கதையாகும். இப்படம் மொழிகளைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் பெரிய ஹிட்டானது. தங்கள் நண்பனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வோம் என்ற கருத்தை ஆணித்தனமாகக் கூறிய இந்தப் படம், ஏராளமான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. மலையாள சினிமாவின் ஒரு அடையாளமாக மாறியது மஞ்சுமெல் பாய்ஸ். இந்தப் படத்திற்கு ஒரு பெரிய தூணாக அமைந்தது, குணா படத்தின் பாடல், 'கண்மணி அன்போடு காதலன்'. காதல் பாடலாக உருவான இந்தப் பாடல், மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு, நட்பு பாடலாக மாறியது.

இந்த நிலையில்தான் அந்தப் பாடலை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்… பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு நோட்டீஸ் விடுத்துள்ளார்.

முன்னதாக, இளையராஜா தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்று கூறி வழக்குத் தொடர்ந்தார். INRECO மற்றும் AGI உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இளையராஜா இசையமைத்த 4, 500 பாடல்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள்:
தியேட்டரில் மாஸ் வெற்றி கொடுத்த 'ஸ்டார்' படம்... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Manjumel Boys and Ilayaraja

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டது. இந்தப் பிரச்சனை தொடர்க்கதையாக இருந்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் கூலி படத்தின் டீஸரில் இளையராஜாவின் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தியது, 1957-ன் கீழ் குற்றம் என்று இளையராஜா நோட்டிஸ் அனுப்பினார். இதனையடுத்து இளையராஜா தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவிற்கும் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com