இந்தியன் 2 இண்ட்ரோ வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசனின் கடைசி படமான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரின் அடுத்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வந்தது இந்தியன் 2. கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் தான் இந்தியன் 2.
கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 படத்துக்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த 1996ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருவதையொட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வெளியாகியுள்ளது. தமிழில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
அதேபோல், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் இயக்குநர் ராஜமெளலி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்தியில் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்தியன் 2 இன்ட்ரோவை வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசனின் கெட்டப், லுக் இரண்டுமே பழைய இந்தியன் தாத்தாவை கண்முன் கொண்டு வந்துள்ளது. 1.58 நிமிடங்கள் ரன்னிங் டைமில் அனிருத் இசையில் பாடலாக உருவாகியுள்ளது இந்தியன் இன்ட்ரோ.