சுதந்திரத்திற்கு முன்பே வெளியான ‘தியாகபூமி’
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெள்ளித்திரையில் முதன் முதலில் சுதந்திர தீயை பற்றவைத்த படம் என்றால் அது ‘தியாகபூமிதான்’ இப்படம் வெளிவர காரணமாக இருந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளரான நமது கல்கி அவர்களே. கல்கி அவர்கள் ஆனந்த விகடன் பத்திரிகையில் தியாகபூமி என்ற தொடர்கதையை எழுதினார். இந்த கதையை திரைப்படமாக கே. சுப்பிரமணியம் அவர்கள் அதே தலைப்பில் படமாக இயக்கி 1939 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
எஸ். எஸ். வாசன் அவர்கள் படம் வெளியிட உதவிகள் செய்தார். அன்று சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளையும், காந்திய கொள்கைகளையும் சொன்ன படம் இது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. சென்னை கெய்ட்டி திரையரங்கில் தியாக பூமி பல நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டது. இப்படத்தில் "தேச சேவை செய்ய வாரீர் " என்று தொடங்கும் டி. கே. பட்டம்மாள் அவர்கள் பாடிய தேச பக்தி பாடலுக்கும், இந்த படத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பையும் கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு இப்படத்திற்கு 1940 ல் தடை விதித்தது.
இந்திய திரைப்பட வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட முதல் படம் தியாகபூமிதான்.விடுதலை கிடைத்த பல வருடங்களுக்கு பின்பு இந்திய அரசு தியாக பூமி திரைப்படத்தின் மீதான தடையை நீக்கியது.சினிமாவில் விடுதலை கருத்துக்களை பின்னாட்களில் சொன்ன பல படங்களுக்கு விதை போட்டது. கல்கியின் தியாக பூமி. எஸ். டி. சுப்பு லட்சுமி, பேபி சரோஜா, பாபநாசம் சிவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
திருநெல்வேலி பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு பேசும் பாளையத்துக்காரரான கட்ட பொம்மு நாயக்கரை சினிமாவுக்காக வீர பாண்டிய கட்ட பொம்மனாக மாற்றினார் இயக்குநர் பி. ஆர். பந்துலு. வெள்ளித்திரையில் சிவாஜி கணேசன் அவர்கள் கட்ட பொம்மனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.1959 ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் வசனம் மற்றும் சிவாஜி அவர்களின் நடிப்பிற்காக தற்போதுவரை கொண்டாடப்படுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் வசனங்கள் மேடையில் பேசப்படாத சுதந்திர நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் தமிழ் மக்களிடயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீர பாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த அதே பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்ற மருது சகோதரர்கள். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணதாசன் தனது மண் மீது உள்ள பாசத்தால் சிவகங்கை சீமை படத்தை தயாரித்தார்.வீர பாண்டிய கட்ட பொம்மன் வெளியான 1959 ஆம் ஆண்டிலேயே இந்த படமும் வெளியானது.பெரிய மருது, சின்ன மருதுவாக டி. கே. எஸ். பகவதி, எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்திருப்பார்கள்.நடிப்பு,இசை கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்தும் இப்படம் வெற்றி பெறவில்லை.கட்ட பொம்மனை ஏற்றுக் கொண்ட மக்கள் தமிழர்களான மருது சகோதரர்களை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டார் கண்ணதாசன்.
இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கி சிறை சென்று செக்கிழுத்தவர் வ. உ. சி. என்றழைக்கப்படும் வ.வு. சிதம்பரம் அவர்கள்.இந்த தியாகியின் வாழ்க்கையை மையமாக வைத்து சிவாஜி நடிப்பில் பந்துலு இயக்கத்தில் 1961ல் வெளியான படம் கப்பலோட்டிய தமிழன். பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சி நாதன் போன்ற தலைவர்களின் வரலாறும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இப்படத்தில் தனது கர்ஜனையில் ரசிகர்களை ஈர்த்த சிவாஜி, சுதந்திரம் என்பதற்கு பின்னால் இருக்கும் வலியை வாழ்ந்தே காட்டியிருப்பார்.
தேசபிதா காந்தி அவர்களைப் பற்றி படம் எடுத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ரிச்சர்ட் அட்டன்ப்ரோ என்ற அமெரிக்க இயக்குநர்.1982ல் வெளியான இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்திருப்பார். எட்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றது இப்படம். காந்தி அவர்கள் கோட்ஸேவால் சுடப்படும் காட்சியில் தொடங்கப்படும் படம், இதே காட்சியில் முடிவடையும். வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், போன்ற போராட்டங்களையும், ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் சரியாக பதிவு செய்திருப்பார் இயக்குநர். ‘அவர் நடந்தார், அவர் பின்னால் இந்த நாடே நடந்தது’ என்று காந்தி பற்றி சொல்வார்கள். இதனை படத்தில் ஆவணப்படுத்தி இருப்பார் இயக்குநர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளில் விடுதலை போராட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கப்பல் ஏறி போயாச்சு பாடல் இன்றளவும் சுதந்திர நாளில் இடம் பெரும் பாடலாக உள்ளது. கிராபிக்ஸ் நுட்பத்தைப் பயன் படுத்தி கமல் நேதாஜியுடன் கை கொடுத்து பேசும் காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுது.
இந்தியன் வெளியன அதே ஆண்டு இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், நடிகர் பிரபு நடிப்பில் சிறைச்சாலை திரைப்படம் வெளியாகி இருந்தது. பொதுவாக தலைவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் விடுதலைப் போராட்ட திரைப்படங்களுக்கு மத்தியில், சிறைச்சாலை திரைப்படம் அந்தமான் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய விடுதலை வீரர்களின் வலியை பேசியது. நாட்டின் விடுதலைக்காக போராடி வீரர்கள் அந்தமான் சிறைகளில் அனுபவித்த கொடுமைகளை கண்முன் நிறுத்தினார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.
2000 மாவது ஆண்டில் கமல் எழுதி, இயக்கி, தயாரித்து வெளி வந்த படம் ஹே ராம்.1945-47 ஆம் ஆண்டுகளின் கால கட்டங்களில் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான் பகுதிகளிலும் நடைபெற்ற மதக் கலவரங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கும். மதவாதிகளால் தூண்டப்படும் ஒருவன் காந்தியை கொல்ல நினைப்பான். ஒரு கட்டத்தில் மனம் மாறி திருந்தி விடுவான்.மேலை நாடுகளில் திரைப்படம் பற்றி படிப்பவர்கள் ஹே ராம் படத்தை ஒரு பாடமாக படித்து வருகிறார்கள். இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி நாம் படித்திருந்தால் ஹே ராம் படம் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.
ஞான ராஜசேகரன் ஐ. ஏ. எஸ் இயக்கி 2000 ஆண்டில் வெளி வந்த படம் பாரதி. முண்டாசு கவிஞனின் வாழ்க்கையை உண்மைக்கு மிக அருகில் பதிவு செய்திருப்பார் டைரக்டர்.பாரதியின் சுதந்திர போராட்ட பங்களிப்பு மட்டுமின்றி பெண் விடுதலை, சமூக விடுதலைகளின் பங்களிப்பையும் சொன்ன படம் பாரதி. மராட்டிய நடிகர் ஷியாஷி ஷிண்டே தமிழ் மகா கவி பாரதியாக வாழ்ந்து காட்டியிருப்பார். இப்படத்தில் ஒரு காட்சியில் காந்தி அவர்கள் பாரதியிடம் பேசி முடித்து சென்ற பின்பு பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்வார் காந்தி. தமிழ் நாட்டில் ஒரு தியேட்டரில் இந்த காட்சியை பார்த்த ஒருவர் ஆம் பாரதியை காக்க தவறி விட்டோம் என்று உணர்ச்சி பொங்க கத்தியே விட்டார்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் அசுடோஷ் கௌரிகர் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் லகான். இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. நமது மக்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இப்படம் கொஞ்சம் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டிருக்கும். விளையாட்டின் வழியாக ஆங்கிலேயேர்களை கிராமத்தில் இருந்து விரட்டி அடிக்கும் இளைஞர்களை மையப்படுத்தி லகான் எடுக்கப்பட்டது.
கமலேஷ் பாண்டே என்பவரின் மூலக்கதையில் ராகேஷ் ஓம் பிரகாஷ் மோரா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 2006 ல் வெளியான படம் இது. சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் என இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய இளம் வீரர்களை பற்றி ஆவணப்படம் எடுக்க லண்டனிலிருந்து வரும் வெளிநாட்டு பெண் திரைப்பட இயக்குநர் வழியை விடுதலை போராட்டத்தை பற்றி பேசியது இப்படம். அமீர் கான், சித்தார்த், மாதவன் நடித்துள்ள ரங் தே பசந்தி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது
ஜாலியன் வாலா பாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் ட யரை லண்டன் நகருக்கே சென்று கொன்றவர் உத்தம் சிங் என்ற மாவீரர். இந்த சம்பவத்தை மைய்யமாக வைத்து 2021ஆம் ஆண்டு அமேசான் ஒ.டி. டி. தளத்தில் வெளியான இப்படத்தை சுஜித் சிர்கார் இயக்கி இருந்தார். விக்கி கௌசல் உத்தம் சிங் கேரக்டரில் நடித்துள்ளார். நடிப்பு, உருவாக்கம், இப்படி பல காரணங்களுக்காக இப்படம் விரும்பப்படுகிறது.
சினிமா எனும் வலிமையான காட்சி ஊடகத்தின் வழியாக சுதந்திர போராட்ட காலகட்டத்தை உண்மைக்கு நெருக்கமான சொன்ன திரைப்படங்கள் எக்காலத்திலும் திரையில் சுதந்திர தீயை சுடர்விடச் செய்யும் ஆற்றல்படைத்தவை.