கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கப் பட்டது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட திருவிழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தொடங்கி வைத்தார்
இந்த திரைப்பட விழாவில் 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப் படுகின்றன. இதன் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் விழாவில் எல்.முருகன், மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நேற்று விழாவின் துவக்கத்தில், ஸ்பானிஷ் திரை நட்சத்திரம் கார்லஸ் சவுராவுக்கு ‘சத்யஜித் ரே வாழ்நாள் திரைப்பட விருது’ வழங்கப்பட்டது. 90 வயதான இவர் உடல்நலக் குறைவால் நேரில் வரமுடியாத்தால், அவரது சார்பில் மகள் அன்னா சவுரா விருதைப் பெற்றார்.
விழா தொடங்கும் முன்னதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:- ஆசியாவின் மிகப்பெரிய இந்தத் திரைப்பட திருவிழாவின் 53-வது விழா இதுவாகும். சர்வதேச அளவில் சிறந்த சினிமா படைப்புகளை திரையிட இந்த விழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவை உலகளாவிய முக்கிய சினிமா தளமாக மாற்ற இந்த விழா வழிசெய்கிறது. இந்த திரைப்பட விழாவில் போட்டிக்கு வெளியிடப்படும் படங்களில் சுமார் 40 % படங்கள் பெண்களால் இயக்கப்பட்டவை அல்லது பெண்களின் முக்கியத்துவத்தைக் கொண்டவை ஆகும்.
இவ்வாறு அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
'ஜெய்பீம்' திரையீடு கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின்னர் இந்தப் பட விழா முதல் முறையாக ரசிகர்கள் பங்கேற்புடன் நேரடியாக நடைபெறுகிறது. இந்தப் பட விழாவில் ஜெய்பீம், சங்கராபரணம், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் திரையிடப்படுகிறது.
மொத்தம் 79 நாடுகளில் இருந்து 280 திரைப்படங்கள் கலந்து கொள்ளும் இந்த திரைப்பட விழா, வருகிற 28-ம் தேதி நிறைவு பெறுகிறது.