
ஒவ்வொரு சினிமா கலைஞர்களுக்கும் உள்ள ஒரே கனவு என்றாவது ஒருநாள் ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்பது தான். அது அவர்களின் வாழ்நாள் லட்சியமாகவும் உள்ளது. சினிமா உலகின் மிகச்சிறந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகின்றது. பெரும்பாலும் ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருந்தாலும், சில சமயங்களில் வெளி நாடுகளைச் சேர்ந்த திரைப் படங்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவை சேர்ந்த திரைப்படங்களுக்கு பொதுவாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதில்லை என்ற வருத்தம் நீண்ட காலமாக உள்ளது. இதனால் இந்திய சினிமாக்கள் சர்வதேச தரம் இல்லையா? என்ற கருத்தும் நிலவி வருகிறது. சிலர் இந்திய திரைப்படங்கள் ஒரு குறுகிய மனப்பான்மையில் ஒரே அடிப்படை கதையை வைத்து எடுக்கப்படுகின்றன என்று மேதாவித்தனமாக பதிலளிப்பார்கள். ஆனால், இந்திய திரைப்படங்கள் எப்படி ஒரு மசாலா பாணியை பின்பற்றுகிறதோ அதே போல தங்களுக்கு என்று மசாலா பாணியை ஹாலிவுட் சினிமா பின்பற்றுகிறது.
வழக்கமாக ஹாலிவுட் படங்கள் ஆரம்பிக்கும் சில காட்சிகளில் வளவள என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்னர் தான் படம் விறுவிறுப்பாக செல்ல ஆரம்பிக்கும். இடைவேளைக்கு பின்னர் படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும். அப்படியே 45 நிமிடங்களில் படம் முடிந்து விடும். மொத்தமாக 1.30-2 மணி நேரம் வரை தான் ஹாலிவுட் படங்கள் இருக்கும். இந்த படங்கள் சர்வதேச மார்க்கெட்களை மனதில் வைத்து எடுக்கப்படும் ஒரே டெம்ப்ளேட் கதையை கொண்ட படங்கள்.
இந்த படத்தில் மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், ஹெலிகாப்டர் சேசிங் எல்லாம் கட்டாயம் இருக்கும். கதைகளில் அமெரிக்கர்கள் உலகையே காப்பதை போல ஒரு பில்டப் வைத்திருப்பார்கள்.
இந்திய சினிமா தனித்துவம் மிக்கது. இசை, நடனம் ஆகிய இரு துறைகளிலும் அமெரிக்க சினிமா, இந்திய சினிமா அருகில் கூட வர முடியாது. ஹாலிவுட் இசையமைப்பாளர்களை விட ஏ.ஆர்.ரஹ்மான் அதிகளவு சர்வதேச விருதுகளை வாங்கி குவித்தவர். ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு முறையும் விருதுகளை வென்றுள்ளார்.
அமிதாப் பச்சன் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் இருந்தாலும் ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற சாதாரண திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டதை சாடி இருந்தார். இந்திய நடிகர்கள் தனது நடிப்பில் நவரசங்களை வெளிப்படுத்துகின்றனர். ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் உணர்ச்சிகரமான நடிப்பு தேவைப்படுவதில்லை. அமெரிக்கர்கள் அவர்களின் ரசனைக்கு ஏற்ற திரைப்படங்களை தான் விருதுகளுக்கு தேர்ந்தெடுப்பார்கள். அதனால் இந்திய நட்சத்திரங்கள் தேசிய விருதுகளை தான் தகுதியாக கருத வேண்டும்.