

உலகம் முழுக்க மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற கதாபாத்திரங்கள் புகழ்பெற்று இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி புகழ்பெற்ற ஒரு கதாபத்திரமும் இருக்கிறது. இது நம் அனைவருக்கும் அறிமுகமான Mr.Bean கதாபாத்திரம் தான். வளர்ந்த மனிதனாக இருந்தாலும் குழந்தை போன்ற செயல்பாடுகளும் , அப்பாவித்தனமான முகபாவங்களும் கொண்ட ஒரு நபர் தான் மிஸ்டர் பீன்.
எப்போதும் பேசாமலே பார்வையாளர்களை தனது நகைச்சுவை திறனால் கவர்ந்தவர் இவர். உலகம் எங்கிலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நாடகத் தொடரும் இதுதான் இன்று பெருமையும் மிஸ்டர் பீன் தொடருக்கு உண்டு.
மிஸ்டர் பீன் பின்னாடி உள்ள அரசியல்:
வெள்ளையர்கள் இந்தியர்களை சர்தார்ஜி ஜோக் சொல்லி கிண்டல் செய்யும் போது , பதிலுக்கு மிஸ்டர் பீன் ஜோக்குகளை சொல்லி பதிலடி கொடுப்பது தான் இந்தியர்களின் வாடிக்கையாக இருந்தது. ஆனால் , சர்தார்ஜி ஜோக்கில் அடிப்படையில் உள்ள வன்மம் , Mr.பீனில் இல்லை. அவர் மக்கள் சிரிப்பதற்காக உருவாக்கப்பட்டவர் , அதில் அப்பாவித்தனமும் சிந்திக்க வைக்கும் திறனும் இருக்கும் , ஆனால் , பீன் அறிவாளியா? முட்டாளா ? என்பதில் குழப்பம் இருக்கும். எதேச்சையாக அவர் செய்யும் செயல்களில் நன்மைகளும் நிகழும்.
Mr.Bean பெயர் காரணம் ?
நம்மூரில் ஒருவரை நகைச்சுவையாக கூப்பிட வெங்காயம் , கத்திரிக்காய் , தக்காளி , வெண்டைக்காய் என்று பெயர் சொல்லி அழைப்போம். அது போலவே பீன்ஸ் காய்கறியின் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது , முதலில் அவருக்கு காலிபிளவர் என்ற பெயர் வைக்க பரிசீலனையில் இருந்தது.
1990 இல் இங்கிலாந்து நாட்டு தொலைக் காட்சியில் Mr. பீன் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பட்டது , இந்த தொடரின் உலகளாவிய வெற்றிக்கு முக்கிய காரணம் , Mr. பீன் கதாபாத்திரத்தில் நடித்த ரோவன் அட்கின்சன் அவர்களின் அபார நடிப்பு தான் . இவர் நடிகராக இல்லாமல் , அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார் , பொது நிகழ்ச்சிகள் மற்றும் விருது பெறும் நிகழ்ச்சியில் கூட அவர் அந்த கதாபாத்திரத்தின் உடல் மொழியையே பிரதிபலிப்பார். வசனம் இல்லாத தொடராக இருந்தாலும் சார்லி சாப்ளின் போல இல்லாமல் , தனித்துவத்தை காட்டியதற்கு அவரை பாராட்டி ஆக வேண்டும்.
3 சக்கர நீல நிற வேன் ஓட்டுநர் யார்?
Mr. பீனுக்கு நண்பராக ஒரு டெடி பியர் இருக்கும் , அவரிடம் சொந்தமாக ஒரு பழைய மினி லேலண்ட் கார் ஒன்று இருக்கும் . ஆரம்பத்தில் மஞ்சள் வண்ணத்தில் இருந்த அந்தக் கார் பின்னாளில் சிட்ரான் பச்சை நிறத்தில் மாற்றப்பட்டது. இந்த காரில் வழக்கமான லாக் உடன், வீட்டுக் கதவு தாழ்ப்பாளும் நகைச்சுவைக்காக பொருத்தப்பட்டிருக்கும்.
மிஸ்டர் பீன் காரில் பயணிக்கும் போதெல்லாம் , சம்பந்தமே இல்லாமல் நீல நிறத்தில் 3 சக்கரங்களை கொண்ட ஒரு வேன் (Reliant Regal Supervan III) ஒன்று அந்த பகுதிக்கு வந்து , அடிக்கடி மிஸ்டர் பீன் காருக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருக்கும். பீன் இந்த காரை அடிக்கடி மோதுவதும் , இடிப்பதும், கவிழ்த்து விடும் செயலிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.
எப்போதும் பீன் காரோடு போட்டி போட்டுக் கொண்டு எங்காவது மோதி சிரிக்க வைப்பது தான் அந்த வேனின் வேலை. ஆனால் , இதில் ஒரு மர்மம் என்னவென்றால் அந்த நீல வேனின் ஓட்டுநரை யாரும் நாடகத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் , மிஸ்டர் பீன் கார்ட்டூன் தொடரில் அந்த நீல காரின் ஓட்டுநர் காட்டப்படுவார் , அவர் எப்போதும் பீன் மீது கோபத்துடன் இருப்பார் , பீன் கார் மீது மோத , எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே வருவார் , மோர்ஸ் என்பது அவர் பெயர்.
மிஸ்டர் பீன் ஏலியனா?
மிஸ்டர் பீன் நாடகம் தொடங்கும் போது வானத்திலிருந்து மிஸ்டர் பீன் பூமியில் விழுவார், நாடகம் முடியும் போது பூமியிலிருந்து வானத்திற்கு இழுக்கப்படுவார். இதை வைத்து அவர் ஏலியனாக இருக்கக் கூடும் என்று ஒரு தகவல் உண்டு. இதனால் , பீன் ஒரு வேற்று கிரகவாசி என்கின்றனர்.