தொழிலில் நஷ்டம்: சொந்த ஹோட்டலை இழுத்து மூடும் பிரபல பாலிவுட் நடிகை?
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் 32 ஆண்டுகளை கடந்தும் சினிமாவில் கோலோச்சி வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி போன்ற படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர். இவர் 1993-ம் ஆண்டு வெளியான பாஸிகர் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். மெயின் கிலாடி து அனாரி, ஜான்வார் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
2007-ம் ஆண்டு பிரித்தானிய செலிபிரிட்டி பிக் பிரதர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானார் ஷில்பா ஷெட்டி. இந்த நிகழ்ச்சியில் இவருடன் பங்கு பெற்ற ஜேட் கூடி, ஜோ ஓ'மேயரா, டேனியல் லியோட் ஆகியோரால் இனவெறி சர்ச்சையில் சிக்கிய ஷில்பா ஷெட்டி இந்த நிகழ்ச்சியின் இறுதியில் 63% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பாலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தார்.
உடற்பயிற்சி ஆர்வலரான இவர் 2015-ம் ஆண்டில் தனது சொந்த யோகா இசைத் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். டிவியில் நடனம் மற்றும் இசைப்-போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக தோன்றி வருகிறார். 2009 முதல் 2015 வரை, இவர் இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பகுதி உரிமையாளராக இருந்தார். அதுமட்டுமின்றி தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இப்படி படு பிஸியாக வலம் வரும் ஷில்பா ஷெட்டிக்கு மும்பை நகரின் தாதரில் தான் ‘பாஸ்டியன் பந்திரா’ என்ற ஓட்டல் உள்ளது. பணக்காரர்கள் மட்டுமே வந்து உணவு உண்டு செல்லும் பிரபலமான ஹோட்டலான இது தாதரில் உள்ள கோஹினூர் சதுக்கத்தின் 48வது மாடியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது கணவரின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை இழுத்து மூட ஷில்பா ஷெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த தகவல் குறித்து மௌனம் கலைத்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. தனது நட்சத்திர ஓட்டலை மூடப் போவதாக வரும் தகவல்கள் வதந்தி என்றும் இந்த தகவலை கேட்கும் போது தனக்கு சிரிப்பு தான் வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலில் எந்த உண்மையையும் கிடையாது என்றும் தனது ‘பாஸ்டியன் பந்திரா’ ஓட்டலுக்கு அருகில் புதிதாக தென்னிந்திய உணவுகள் சுடச்சுட கிடைக்கும் வகையில் புதிய உணவகத்தை திறக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தொழிலில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் வகையில் தனது புதிய ஓட்டலை ஜுகு பகுதியில் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் இதுபோன்று பரவும் வதந்திகளை நம்பி இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கலாமா என்றும் ரசிகர்களை செல்லமாக கோபித்து கொண்டார் நடிகை ஷில்பா ஷெட்டி.

