தளபதி 69 ஓர் அரசியல் படமாக இருக்குமா? இயக்கப்போவது யார்?

Thalapathy 69
Thalapathy 69

தளபதி 69 நடிகர் விஜயின் சினிமா பயணத்திற்கு இறுதி திரைப்படமாக அமையவுள்ள ஒரு படமாகும். அப்போ அந்த படத்தை இயக்கப்போவது யாராக இருக்கும்? அது அரசியல் சார்ந்த கதைகளத்தோடு அமைந்திருக்குமா?

விஜயின் GOAT திரைப்படம்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘the greatest of all time’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைபாடுகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உருவாகும் GOAT படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

அரசியலில் என்ட்ரீ கொடுத்த விஜய்

நடிகர் விஜய் கண்டிப்பாக ஒருநாள் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற தன் அரசியல் கட்சி குறித்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் முழுநேர அரசியலில் களமிறங்க இருப்பதால் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவதாக கூறி தனது ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருபுறம் விஜய் அரசியலுக்கு வருவது ஆனந்தத்தை அளித்தாலும்கூட அவர் சினிமாவை விட்டு விலகுவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் அவரது ரசிகர்கள்.

தளபதி 69 இயக்கப்போவது யார்?

தளபதி 69 படம் தான் நடிகர் விஜயின் சினிமா பயணத்திற்கு இறுதி திரைப்படமாக இருக்கும் என்ற பட்சத்தில் அதனை யார் இயக்கப்போவது என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்து வருகின்றது. அதுமட்டுமின்றி பல இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கவுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் இதைப்பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து எச்.வினோத் முன்பு அளித்த பழைய பேட்டி ஒன்றில் விஜய் படத்தை இயக்குவது குறித்து பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி 69 அரசியல் படமாக இருக்குமா?

எச்.வினோத் அளித்த பேட்டியில் அவர், விஜய்யை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக முழுக்க முழுக்க ஒரு அரசியல் படத்தை தான் இயக்குவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 திரைப்படம் நிச்சயம் ஒரு அரசியல் படமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கூடிய விரைவில் இயக்குனர் வினோத் மற்றும் விஜய்யின் கூட்டணி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com