

தற்போது பிரபலங்கள் உடல்நலம் பற்றி தவறான தகவல் பரவும் காலமாக உள்ளது. இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா காலமாகி விட்டார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது. இந்தியாவுக்குள் இப்படி ஒரு வதந்தி பரவும் வேளையில், வெளிநாடுகளில் வேறு ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் ஹாங்காங் சூப்பர் ஸ்டாரும் உலகளாவிய பிரபலம் மிகுந்த நடிகர் ஜாக்கிசான் காலமானதாக செய்தி பரவியது.
71 வயதான ஜாக்கி சானின் புகழ் உலகெங்கிலும் உச்சத்தில் உள்ளது. ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஜாக்கி சானை தெரியாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. 90 களின் காலத்தில் உலக சினிமாவை ஜாக்கி சான் ஆக்கிரமித்து இருந்தார். சர்வதேச எல்லைகளைக் கடந்த உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக ஜாக்கி சான் இருந்தார். இவரின் திரைப்படம் வெளியாகாத நாடே கிடையாது.
ஹாலிவுட் ஆக்ஷன் நடிகரான புரூஸ்லீ திரைப்படத்தில் ஸ்டண்ட் நடிகராக முதலில் அறிமுகமானார் ஜாக்கி சான். புரூஸ்லீ நடிக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் அவர் பல சமயம் ஸ்டன்ட் நடிகர்களை தாக்கி விடுவார். இவ்வாறு தாக்குதலுக்கு ஆளாகும் நடிகர் எவரும் உடனடியாக நிற்க முடியாது , புரூஸ்லீயின் அடியும் பயங்கரமாக இருக்கும் , தாக்குதலுக்கு ஆளானவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில் இருப்பார். ஆனால் , புரூஸ்லீ உதைத்தும் அதே இடத்தில் சமாளித்து நின்றவர் ஜாக்கி சான். அதனால் , அவர் புகழ் பெற ஆரம்பித்தார்.
புரூஸ் லீயின் மறைவிற்கு பின் வெற்றிடமாக இருந்த ஆக்சன் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு ஜாக்கி சான் வளர ஆரம்பித்தார். ஜாக்கி சான் மற்ற சண்டை நடிகரை விட சிறப்பாக நடிக்க ஆரம்பித்தார். நகைச்சுவை மற்றும் சண்டை என்ற புதிய பாணியில் ஜாக்கி பயணித்தார். வழக்கமாக ஆக்சன் நடிகர்கள் சண்டையின் போது அடி வாங்குவதை போல நடிக்க மாட்டார்கள் , ஜாக்கி சான் இதில் மாறுபட்டார். நகைச்சுவைக்காக அடி வாங்கும் காட்சிகளும் அவர் படத்தில் இடம் பெறும். ஜாக்கி சானின் புதிய பாணி நடிப்பு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவர்ந்தது. ஹாலிவுட் நடிகர்களையும் தாண்டி உலகப் புகழ் பெற்றார்.
வயது காரணமாக தற்போது ஜாக்கி படங்களில் குறைவாக நடிக்கிறார். இந்நிலையில் அவரை பற்றிய ஒரு வதந்தி நவம்பர் 11, 2025 அன்று பல சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது. "பல தசாப்தங்களாக சண்டைக் காட்சிகளில் அடிபட்டு ஏற்பட்ட சிக்கல்களால் போராடி வந்த 71 வயது ஜாக்கி சான் காலமானார்" என்று ஒரே மாதிரியான செய்திகளைப் பயனர்கள் பகிர்ந்தனர். இந்தக் வதந்தியை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பரப்பினர். அந்தப் படத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பது போலக் காட்டப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் பீதியும் அதிகரித்தது.
இந்தச் செய்தியால் , உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஜாக்கி சானுக்கு அஞ்சலி செலுத்தி சோகத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர். ஆனால், இந்தச் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று பல முக்கியமான செய்தி நிறுவனங்களும், அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கங்களும் உடனே உறுதிப்படுத்தின. ஜாக்கி சான் இப்போதும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார், சுறுசுறுப்பாக இருக்கிறார், தன் அடுத்தடுத்த படங்களுக்குத் தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்த்தவுடன் தான் ஜாக்கிசான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அதே நேரத்தில் இப்படி போலியாக வதந்தி பரப்பி வருபவர்களை அவர் ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.