

ரஜினிகாந்த் நடித்திருக்க கூடிய ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஹாட் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.
அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். மேலும், ரஜினி சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடுப்பானார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தமிழகத்தில் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர். அதேபோல் இந்திய அளவில் 50 முதல் 55 கோடி வரையும், உலக அளவில் 90 கோடி ரூபாயும் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை ஜெயிலர் நிகழ்த்தியுள்ளது. அதேசமயம் விடுமுறை அல்லாத நாளில் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெயரையும் ஜெயிலர் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் இந்த திரைப்படத்தை சில திரையரங்குகளில் 5 காட்சிகளும், சில திரையரங்குகளில் 4 காட்சிகள் மட்டுமே திரையிட்டனர். விடுமுறை நாட்கள் இருந்திருந்தால் படத்திற்கு மேலும் இரண்டு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டிருக்கும், அதன் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் அளவில் அதிகமான வசூல் கிடைத்திருக்கும் என்று திரை வியாபாரத்தில் கூறுகின்றனர்.
இருந்தாலும் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் துணிவு, வாரிசு ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் முடிவெடுத்துள்ளது. அதில் துணிவு திரைப்படம் 21 கோடியே 97 லட்ச ரூபாய் முதல் நாள் வசூல் நிகழ்த்தி இருந்தது. அப்போது இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது ஜெயிலர் திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரையும், சாதனையையும் படைத்துள்ளது.