
பலப்பல சச்சரவுகளைத் தாண்டி, எக்கச்சக்க ப்ரமோஷன் பந்தாவுடன் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி உள்ளது ரஜினியின் 164 திரைப்படம் ஜெயிலர்.
ஓய்வு பெற்ற ஜெயிலர் ரஜினியின் மகன் காவல் துறை அதிகாரியாக பணியாற்றுகிறார். சிலை கடத்தல் கும்பல் மகனை கடத்தி வைத்து ரஜினியிடம் ஒரு டிமாண்ட் வைக்கிறது. தாங்கள் விரும்பும் ஒரு வைர கிரீடத்தை கொண்டு வந்து சேர்த்தால் மகனை மீண்டும் ஒப்படைப்பதாகச் சொல்கிறது. ரஜினி கடத்தல் கும்பல் சொல்வதை ஏற்று கீரீடத்தை திருட செல்கிறார். கதையின் பின்னனி இதுதான்.
படத்தின் முதல் பாதி வேகமாகவும், மாறுபட்ட செண்டிமென்ட் காட்சிகளாகவும் செல்கிறது. இரண்டாம் பாதி நாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த காட்சிகளை நினைவு படுத்துகிறது. இரண்டாவது பாதியை நகைச்சுவை தாங்கிப் பிடிக்கிறது. விக்ரம், தங்கப்பதக்கம், இந்தியன், திரைப்படங்களின் சாயல் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது.
ரஜினி தன் வயதுக்கு ஏற்ற காதபாத்திரத்தில் நடித்துளார். பேரனிடம் விளையாடும்போதும், மகனை நினைத்து உருகும் போதும் ஒரு மாறுபட்ட ரஜினியைக் காண முடிகிறது. ரஜினிக்கே உரிய ஸ்டைலையும் தாண்டி அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது.
"அப்பாகிட்ட ஏதாவது சொல்லணுமா" என மகனிடம் ரஜினி எதிர்பார்ப்புடன் கேட்கும்போது இதை உணர முடிகிறது.
ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை வைத்துதான் ஹீரோ கேரக்டர் நிற்கும் என்பார்கள். ஜெயிலர் பட வில்லன் விநாயகன் தன் நடிப்பில் ரஜினிக்கு நிகராக நிற்பது இதை நிரூபிக்கிறது. சாரே சாரே என்று மலையாளம் கலந்த தமிழில் இவர் பேசி வில்லத்தனம் செய்வது செம டெர்ரராகத் தெரிகிறது. படத்தில் யோகிபாபு செய்யும் காமெடியை விட சுனில் கிங்ஸ்லி செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவைக்கின்றன. ரம்யா கிருஷ்ணன் அடக்கமான அம்மாவாக வந்து போகிறார். வசந்த் ரவிக்கு நடிப்பில் இன்னமும் பயிற்சி தேவை. ஜாக்கி ஷெராப்,மோகன் லால், சிவராஜ் குமார் என சிலரின் பங்கு கதைக்கு தேவையா என்ற கேள்வி எழுந்தாலும் அவர்களது பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
பிளாஷ் பேக் காட்சிகளில் ரஜினி இளமையாக தெரிகிறார். இதற்கு மேக் அப் கலைஞர் ராகுநாத்தை பாராட்டலாம்.
கதை, லாஜிக் எல்லாம் மறந்து ஒரு மசாலா படமாக ரஜினிக்காக நடிப்புக்காக ஜெயிலரை பார்க்கலாம்.
கண்டிப்பான ஜெயிலர், பாசக்கார தாத்தா, மகனுக்காக ஏங்கும் அப்பா ரஜினியின் இந்த மூன்று முகங்களை ஜெயிலரில் பார்க்கலாம்.