'ஜெயிலர்’ ரஜினியைப் பார்த்து கை தட்டிய கடவுளின் குழந்தைகள்!

'ஜெயிலர்’ ரஜினியைப் பார்த்து கை தட்டிய கடவுளின் குழந்தைகள்!
Updated on

சுதந்திர தினத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் சேலத்தில் உள்ள நிழல் சேவை அமைப்பினர் கொண்டாடியது வித்யாசமானது. ஆம், ஆதரவற்ற காப்பகங்களில் உள்ள குழந்தைகளை ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி மகிழ்ந்துள்ளனர் இவர்கள். அந்தக் குழந்தைகள் கரங்களைத் தட்டி ஆர்ப்பரித்த தருணங்கள் அங்கு கூடியிருந்த மற்றவர்களையும் நெகிழவைத்தது .

  இது  குறித்து நிழல் சேவை அமைப்பைச் சேர்ந்த ஹரிஹரன் கூறியதாவது...

“இந்த அமைப்பு எங்களைப் போன்ற பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களால் 2010ல் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆதரவற்றோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் காப்பகம், முதியோர் இல்லங்கள் சென்று எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.

எங்களுக்கென்று ஒரு வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் உதவிகள் தேவைப்படுவோருக்கும் உதவிகள் செய்வோருக்கும் இடையில் தொடர்புகொண்டு இப் பணியை செய்கிறோம். வருடம் தோறும் வரும் சிறந்த படங்களுக்கு இல்லத்துக் குழந்தைகளை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நம் குடும்பம் எப்படி மகிழ்கிறதோ அதே அனுபவத்தை அவர்களும் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

‘தர்பார்’, ‘ஆர் ஆர் ஆர்’, ‘லயன்கிங்’ போன்ற படங்களின் வரிசையில் தற்போது சுதந்திர தினமான நேற்று ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்திற்கு இல்லங்களில் இருந்து 125 பேரை அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தோம். நாங்களே அவர்களுக்குத் தேவையான நொறுக்குத்தீனிகளை  தயாரித்து எடுத்துச்செல்வதால் முன்கூட்டியே தியேட்டரில் அனுமதி வாங்கினோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் அனுமதித்தனர்.

இதில் என்ன சிறப்பு என்றால் அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத அந்தக் குழந்தைகள் திரையில் ரஜினி அவர்களைப் பார்த்ததுமே கைகளைத் தட்டி சந்தோசத்துடன் ஆர்ப்பரித்ததுதான்.

இந்தச் செயலுக்கு பலரின் பாராட்டுகளுடன் சிலரின் கண்டனங்களும் எழும். இருந்தாலும் சினிமா என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்தக் குழந்தைகளின் முகத்தில் எல்லையற்ற உற்சாகத்தைக் காண்பதில் உள்ள மனநிறைவு அனுபவித்தால் மட்டுமே புரியும்!”

logo
Kalki Online
kalkionline.com