ஜெயிலர் – அப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்?

ஜெயிலர் – அப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்?
Published on

து "ஜெயிலர்" திரை விமர்சனம் அல்ல…

ரொம்ப நாட்களாக என் மனதின் அடித்தளத்தில் எனக்குள் சுழன்று கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று…

"எப்படி இந்த மனிதரின் பின்னால் கோடிக்கணக்கான உலக மாந்தர் மனங்கள் ஓடுகின்றன?! அப்படி என்ன அவரிடம்  இருக்கிறது!? அவரின் "பவர்" அந்த கண்களிலா? உடல் மொழியிலா? ஸ்டைலிலா?

ஜெயிலர் படம் முழுவதும் இந்த கேள்விதான் எனக்குள். படத்தை நான் பார்த்தேனா, படம் என்னை பார்த்ததா? குழப்பம்… ரஜினி அவர்களின் முகம் தெரியும் இடங்களில் எல்லாம் படம் பார்ப்போரின் மகிழ்ச்சிக்கு கூக்குரல். எனது கண்கள் அந்த கூட்டத்தை நோக்குகின்றன. இதழில் இளநகை அரும்புகிறது. மனம் மீண்டும் அதே கேள்விகளில் விழுகிறது. (யாருக்காவது சரியான பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்)

பூப் பாதையில் ஆரம்பிக்கிறது சாதுவான முத்துவின் (ரஜினியின்) வாழ்க்கைப் பாதை. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. மனைவி, மகன் குடும்பம் என நிறைவான வாழ்க்கை. சிலைத் திருட்டில் ஈடுபட்டிருக்கும் கும்பலை தேடிச் சென்ற மகன் வசந்த் ரவி அக் கும்பலால் கடத்தப்பட பூப்பாதை முப்பாதையாக மாற்றப்படுகிறது. சாதுவான முத்து அதன்பிறகு டைகர் முத்துவேல் பாண்டியன் அவதாரம் எடுக்கும் காட்சிகள் சிறப்பு. பட்டுப் பூச்சி எப்படி ஒவ்வொரு நிலையாகக் கடந்து  முதிர்வு கொள்கிறதோ அதுபோல முத்துவிலிருந்து டைகர் முத்துவேல் பாண்டியன் அவதார காட்சிகள் வெகு சிறப்பு.

அத்தனை நட்சத்திரங்களும் திரையில் மின்னுவதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. யோகிபாபு - ரஜினி கூட்டணி சிரிப்பலை. இயக்குனர் நெல்சன் ரசிகர்களின் " பல்ஸ் " புரிந்து இயக்கியுள்ளார். அனிருத் விசில் மழை. இரு இளைய தலைமுறைக்கும் வாழ்த்துக்கள். வில்லன் கண்களும் மலையாள வாடையும் மனதை விட்டு விலக சில நாட்கள் ஆகும். படம் பார்க்கும் பொழுது சில படங்களின் தொடர்புக் காட்சிகள் மனதில் நிழலாடினாலும்  திடுக்கிடும் எதிர்பாராத திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கின்றன.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்து இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பியாகி விட்டது. ஆனாலும் மனதில் அதே கேள்வி. "எப்படி இந்த மனிதர் பின்னால்" யாருக்காவது பதில் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com