
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துடன் ஒரு தமிழ் வெப் தொடரில் நடிக்க உள்ளார். தற்போது அதற்கான பிரீ-புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் ‘தடாக்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இந்தித் திரையுலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார். கவர்ச்சியிலும் கலக்கி வரும் ஜான்வி கபூருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் பாலிவுட் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் பிரபலமாக உள்ளார்.
பாலிவுட்டில் கலக்கி வந்த ஜான்வி கபூர், தெலுங்கில் கடந்த ஆண்டு ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ‘தேவரா' படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ராம் சரண் ஜோடியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் ‘பெத்தி' என்ற புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூரை ஜோடியாக நடிக்க வைக்க பல கதாநாயகர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த முயற்சிகள் கைகூடாமலேயே இருந்து வந்தது.
இதற்கிடையில் தமிழில் தயாராகும் வெப் தொடர் ஒன்றில் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ உருவாக்கும் புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதனை ‘களவாணி' படத்தை இயக்கி பிரபலமான சற்குணம் இயக்கத்தில் பெண்களை மையமாக வைத்து இந்த இணையத்தொடர் உருவாகிறது.
ஜான்வி கபூர் தனது தற்போதைய திட்டமான பரம் சுந்தரியை முடித்த பிறகு, புதிய வெப் தொடருக்கான படப்பிடிப்பு ஜூலை - ஆகஸ்டு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பணியாற்றுவதன் மூலம் தனது மறைந்த தாயார், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த விரும்புவதாக ஜான்வி கபூர் அடிக்கடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.