

தமிழக முதல்வர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் , அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக சென்னை சாய்ராம் கல்லூரியில், செப் 18-ஆம் தேதி சிக்மா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடும், இசை வெளியீட்டு விழாவும் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்த திரைப்படத்தில் சந்திப் கிஷன், பிரியா அப்துல்லா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர், இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால், அதற்கு முன்னர் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் ஆரம்பித்து வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் அவரது தந்தை விஜய் இதுவரை கலந்து கொள்ளவில்லை. மேலும் அந்த திரைப்படத்தைப் பற்றி எந்த இடத்திலும் விஜய் பேசவில்லை , இது போன்ற கேள்விகளுக்கு மிகவும் பொறுப்புடன் ஜேசன் சஞ்சய் ஊடகவியலாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
இது போன்ற கேள்விகள் இதற்கு முன்னரும் தோன்றியுள்ளன. விஜய் முதல்வராக பதவியேற்ற நேரத்தில், அவருடைய குடும்பத்தின் சார்பாக மனைவியோ, மகளோ மகனோ, யாரும் வரவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதன் பின்னர் சுதந்திர தின விழாவில் விஜய் தலைமையேற்றுக் கலந்து கொண்ட போது கூட, அவரது மனைவியும் மகனும் கலந்து கொள்ளவில்லை, அப்போதும் இதுபோன்ற கேள்விகளும் எழுந்து இருந்தன.
ஊடகவியலாளருக்கு விஜயின் அரசியல் சார்ந்த எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காத சஞ்சய், தன் திரைப்படம் சார்ந்த கேள்விகளுக்கு மட்டும் விரிவாக பதிலளித்தார். அப்போது தனது திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தனது தந்தை வராத காரணத்தையும் விளக்கியுள்ளார்.
ஜேசன் சஞ்சயிடம் செய்தியாளர்கள், "உங்கள் அப்பா தான் தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். உங்களது திரைப்படத்தினை பிரமோட் செய்வதற்கு ஏதேனும் ஒரு நாள் அவர் வருவாரா?" என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த ஜேசன் , எனது அப்பா முதல்வர் ஆன பின் எங்களுடைய பொறுப்பு அதிகரித்து உள்ளது. என்னுடைய திரைப்படத்தின் வெளியீட்டிற்காக எனது அப்பா மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார். இந்த படத்தில் நீ என்னதான் செய்து இருக்கிறாய்? என்று நான் பார்க்கப் போகிறேன் என்று என்னிடம் கூறியுள்ளார். ஆனால், படத்தின் ப்ரமோஷனுக்கெல்லாம் அவர் தேவையில்லை , வரவும் மாட்டார்.
அவருக்கு இருக்கும் பணிச்சுமை மிகவும் அதிகம். அதனால் , அவர் இது போன்ற நிகழ்வுகளுக்கு வர தேவையில்லை. நான் உருவாக்கி வைத்துள்ள எனது படைப்பினை, அவர் ஒருமுறை பார்த்தாலே எனக்கு போதும். நான் எனது சொந்தத் திறமை மற்றும் உழைப்பை மட்டுமே வைத்து மக்களிடம் செல்ல விரும்புகிறேன் , என்று ஜேசன் கூறியுள்ளார்.
அடுத்ததாக மற்றும் ஒரு முக்கிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். நீங்கள் முதன்முறையாக படம் எடுத்துள்ளதற்கு உங்களது அப்பா கொடுத்த பரிசு என்ன? என்று கேட்டனர். அதற்கு மிகவும் நிதானமாக பதில் அளித்து ஜேசன் , "அவரது கோடிக்கணக்கான அன்பான ரசிகர்களை எனக்கு பரிசாக தந்துள்ளார்," என்று கூறினார். ஜேசன் சஞ்சயின் நேர்காணலைக் கண்ட பலரும் , பல்வேறு குடும்ப சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஜேசனின் முதிர்ச்சியான, இயல்பான பேச்சைக் பலரும் பாராட்டி வருகின்றனர்.