விமர்சனம்: ஜாலியோ ஜிம்கானா - பேரில் மட்டுமே ஜாலி; திரையில் சிரிப்பு காலி!
ரேட்டிங்(2.5 / 5)
சரியாக முப்பது வருடங்களுக்கு முன்னால் மகளிர் மட்டும் திரைப்படம் வந்தது. இந்த படத்தில் மறைந்த நாகேஷ் அவர்கள் பிணமாக நடித்திருப்பார். இந்த பிணத்தை மூன்று பெண்கள் மிக ஜாக்கிரதையாக மறைப்பார்கள். இந்த ஒன் லைனில் 'இன்ஸ்பிரேஷன்' ஆன சக்தி சிதம்பரம் முப்பது வருடங்களுக்கு பின்னால் இந்த 2024 ஆம் ஆண்டில் பிணத்தை கதை கருவாக கொண்டு ஜாலியோ ஜிம்கானா படம் தந்திருக்கிறார்.
அம்மா அபிராமிக்கு, மடோனா ஜெபஸ்டின் உட்பட மூன்று மகள்கள். ஹோட்டல் நடத்தும் போது ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தங்கள் தாத்தாவை எம்.எல்.ஏ ஒருவர் தாக்கி விடுகிறார். இந்த பிரச்சனைக்கு அட்வகேட் பிரபு தேவாவை காண செல்கிறார்கள். அங்கே பிரபு தேவா கொலை செய்யப்பட்டிருக்கிறார். பிரபு தேவா வங்கி கணக்கில் பத்து கோடி பணம் இருப்பதை தெரிந்து கொண்ட நான்கு பெண்களும் இந்த பணத்தை அபேஸ் செய்ய பிரபு தேவாவை உயிருள்ளவர் போல மேக் அப் செய்து வெளியிடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள். பிணம் பத்து கோடி பெற்று தந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த ஜாலியோ ஜிம்கானா.
பிரபு தேவாவின் நடனத்தை பார்க்கலாம் என்று எண்ணி இந்த படத்திற்கு செல்பவர்களுக்கு இரண்டாவது காட்சி முதல் பிணமாக நடித்து, ஏமாற்றம் தருகிறார். பாடல் காட்சிகளில் லேடீஸ் டான்ஸ் ஆடுறாங்க. நம்ம மாஸ்டர் மிக்ஸர் சாப்பிட்டு கிட்டு இருக்காரு. ஓவரால் படத்தை தாங்கி பிடிப்பது மடோனா ஜெபாஸ்டின்தான். அக்கா நல்லா நடிச்சாலும் பல இடங்களில் கொஞ்சம் ஓவரா நடிக்கிறாங்க. அம்மா அபிராமியும் இதே மாதிரிதான் நடிக்கிறாங்க.
பிணத்தை வைத்து காமெடி என்கிற கான்செப்ட்டில் நகைச்சுவை விருந்தையே நடத்தி இருக்கலாம். ஆனால் காமெடி கருவேப்பிலை மாதிரிதான் இருக்கு. தீனா, ஜான் விஜய், யோகிபாபு இருந்தும் காமெடி இல்லை. பொம்மலாட்டம், ஜாதி பிரச்சனை போன்ற விஷயங்களை தொட்டு இருப்பது கொஞ்சம் ஆறுதல். 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' பாடல் கண்டிப்பாக ஆடியன்ஸுக்கு பிடிக்கும். (இந்த பாடலை எழுதியவர் படத்தின் உதவி இயக்குனரும், பத்திரிகையாளருமான ஜெகன் என்பவர் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் நிலவுகிறது. தனது பெயரை படத்தின் டைரக்டர் டைட்டிலில் பயன்படுத்தவில்லை என்ற புகார் ஒன்றை அளித்திருந்தார் ஜெகன் )
மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் சில காட்சிகள் பிணமாக நடித்திருந்தாலும் இன்று வரை இந்த காட்சிகள் காமெடிக்காக விரும்பி பார்க்க படுகிறது. ஜாலியோ ஜிம்கானாவில் பிரபு தேவா படம் முழுவதும் பிணமாக நடித்திருந்தும் சிரிப்பே வர வில்லை. ஜாலியோ ஜிம்கானா – ஜாலியாக இல்லை