கமல்ஹாசன் சமீப காலமாக நிகழ்ச்சிகல் பேசும் போது தனது வாழக்கையில் நடந்த பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் -2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது சிறு வயதில் கே.பி. சுந்தராம்பாள் அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
"சென்னையில் எங்கள் குடும்பம் வசித்த வீட்டிற்கு பின்னால் கே. பி. சுந்தராம்பாள் அவர்களின் வீடு இருந்தது. அம்மையாரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றேன். சும்மா இல்லாமல் அவரிடம் 'பழம் நீ அப்பா' என்ற பாடலை கூச்சமே இல்லாமல் பாடிக் காட்டினேன். 'ஒளவையார்' சுந்தராம்பாள் அவர்கள் என்னை தட்டி கொடுத்து பாராட்டி ஞானப்பழம் தருவதற்கு பதிலாக நான்கு இட்லிகளை தட்டில் தந்து சாப்பிட வைத்தார். ஒளவையாரிடம் 'ஞான இட்லி' பெற்றவன் நான். இவர்களை போன்ற பலரின் அன்புதான் என்னை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது" என்றார் கமல். மேலும் தனது தந்தை ஸ்ரீனிவாசன் அவர்களை பற்றியும் ஒரு நினைவை பகிர்ந்து கொண்டார்.
"இப்போதெல்லாம் கெட்டவார்த்தை திரையில் வரும் போது சென்சாரில் ரசிகர்களுக்கு கேட்காமல் இருக்க, mute போட சொல்கிறார்கள். இதை பார்க்கும் போது நான் பள்ளியில் படித்த காலத்தில் செய்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் எழுதிய கவிதை ஒன்றில் கெட்ட வார்த்தை எழுதி விட்டேன். இந்த தகவலை பள்ளி நிர்வாகம் என் வீட்டிற்கு தெரியப்படுத்தி விட்டது. என் வீட்டில் இருப்பவர்கள் நான் தவறான வழியில் செல்கிறேன் என பயந்து பரமக்குடியிலிருந்த என் அப்பாவை லெட்டர் போட்டு வர வைத்து விட்டார்கள். நான் எழுதியதை பொறுமையாக படித்த என் அப்பா, "நீ இங்கே எழுதிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக மாற வேண்டுமானால் பேசாமல் மருத்துவம் படித்து விடு. மருத்துவ துறையில் நீ எழுதிய வார்த்தைகள் எல்லாம் நல்ல வார்த்தைகளாக மாறி விடும்" என்றார். நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்பதெல்லாம் இடத்திற்கு இடம், சூழ்நிலை ஏற்ப மாறுபடும் என்று அன்று புரிந்து கொண்டேன். இன்று இது போன்ற வார்த்தைகளை சென்சார் போர்ட் கூர்ந்து கவனிக்கும் போது என் அப்பா சொன்னது நினைவுக்கு வருகிறது. நல்லதை பற்றி புரிந்து கொள்ள தீயதும் அருகில் இருக்க வேண்டியுள்ளது," என தந்தை பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் நினைவு கூர்ந்தார் கமல்.
"கமலின் அப்பா ஸ்ரீனிவாசன், சகோதரர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் இவர்கள் மூவரின் முக அமைப்பை புகைப்படத்தில் பார்த்து, இவர்களின் சாயலில் உருவானதுதான் இந்தியன் தாத்தா முகம்" என படத்தின் இயக்குநர் ஷங்கர் இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.