
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2001 ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படம் இன்று மீண்டும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ்செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து படமும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆளவந்தான் படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல், ரஜினியின் முத்து படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், ரசிகர்கள் இன்றைக்கும் தியேட்டர்களில் முத்து படத்தை கொண்டாடிதீர்த்த வீடியோக்கள் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் திரை விமர்சனத்திற்கு பெயர்போன ’கல்கி’ இதழில் ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் குறித்து வெவ்வேறு காலத்தில் வெளியான சுவாரஸ்யமான விமர்சனம் எழுத்தப்பட்டுள்ளது. ஆளவந்தான், முத்து படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படம் குறித்து அப்போது வெளியான விமர்சனத்தின் பிளாஷ்பேக் இதோ உங்களுக்காக..
ஆளவந்தான் : கலைப்புலி தாணு தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தப் படம்தான் தீபாவளி படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். 'ஆளவந்தான்' மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. அதாவது இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே அதிக தொகைக்கு அதாவது சுமார் இருபத்தைந்து கோடிக்கு விற்பனையான படம் இதுதான்.
தமிழில் எத்தனையோ இரட்டையர் கதைகள் வந்திருக்கின்றன. ஆளவந்தானும் ஓர் இரட் டையர் கதை. முற்றிலும் வித்தியாசமான கதையாக இதை வடித்திருக்கிறார் கதாசிரியர் கமல்ஹாசன். பல வருடங்களுக்கு முன் 'இதயம் பேசுகிறது' இதழில் கமல் எழுதிய "தாயம்' என்ற தொடர் கதைதான் இது.
கதாசிரியராக சர்வதேச தரத்தில் சிந்தித்திருக்கும் கமல், நடிகராக பல புதிய முயற்சிகளை 'ஆளவந்தான்' படத்தில் மேற் கொண்டதன் மூலம் தமிழ் சினிமாவை உலகதரத்துக்கு உயர்த்தியிருக்கிறார். நந்த குமார் என்ற மனநோயாளியான குற்றவாளி பாத்திரத்தில் கமல் நடிப்பு பரபரப்பாய்ப் பேசப்படுவதாக இருக்கும்.
இன்றைக்கும் தியேட்டர்களில் கொண்டாடப்படும் முத்து படம் வெளியாக 28 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இந்த படம் வெளியான 1995ம் ஆண்டு கமல்ஹாசன் உட்பட அப்போது பிரபலமாக இருந்த பல ஹீரோக்களின் படங்களும் வெளியாகி இருந்தது. ஆனால், முத்து தமிழ்நாடு மட்டுமல்லாது ஜப்பான் நாடுவரை சென்று மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது.
இன்றைக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முத்து படத்தினால்தான். இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு ’கல்கி’ இதழில் முத்து படம் குறித்து வெளியான விமர்சனத்தை பார்போமா...
ரஜினியின் முத்துவும் சரி கமலின் ’குருதிப் புனலும் ’சரி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு கதாநாயகர்களுக்குமே வெற்றி இன்றியமையாததாகிறது.
முத்து, வியாபார ரீதியில் வெற்றியடைவது அநேகமாக உறுதிதானென்றாலும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் காரணமாக இந்தப் படத்தின் அரசியல் ரீதியிலான வெற்றியும் ரஜினியைப் பொறுத்தவரை அத்தியாவசியமாகிறது.
குணா, மகாநதி, பாசவலை போன்ற கமல் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கின்றன. வியாபார ரீதியில், தரமான படங்கள் என்று அவை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும் பொழுதுபோக்கை எதிர்பார்த்து, தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அவை திருப்திப்படுத்தவில்லை. எனவே இந்த ரசனைக்குரியோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் குருதிப் புனலுக்கு.
இதை மனத்தில் கொண்டே, குருதிப்புனல் விளம்பரங்கள் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. 'இது ஒரு கமர்ஷியல் படம்' என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிக்காட்டத் தொடங்கி விட்டார்கள்.அதிரடிக் காட்சிகள் கொண்ட டிரைலரும் துப்பாக்கியுடன் கமல் நிற்பது போன்ற புகைப் படங்களுமாக பார்வைக்கு வந்திருக்கின்றன.
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படியாக கமல் - கௌதமி இருவரும் ஹாலிவுட் பாணியில் உதட்டு முத்தமிடும் புகைப்படம் ஒரு பத்திரிகை விடாமல் (கல்கி தவிர!) இடம் பெற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!
இந்த வகையில் இவ்விரு நட்சத்திரங்களின் படங்களை, அவர்களின் தனிப்பட்ட இமேஜோடு சேர்த்துச் சற்று ஆராய்ந்து பார்த்தால் சில சுவாரஸ்யமான ஒற்றுமை - வேற்றுமைகள் காணக் கிடைக்கின்றன.
இரண்டு பேரும் பாலசந்தரின் சீடர்கள். திரையுலகில் நுழைந்தது வேறு வேறு சமயங்களில் என்றாலும் ஹீரோக்களானது ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில். தனித்துவம் வாய்ந்த 'ஸ்டைல்' மூலம் மக்களிடம் ஓர் அடையாளம் தேடிக்கொள்ள முடியும் என்று நிரூபித்தவர் பாலசந்தர். அதை அப்படியே மனத்தில் வாங்கி, தமக்கென ஒரு 'ஸ்டைல்' உருவாக்கி அதன் மூலமே சூப்பர் ஸ்டார் ஆனார் ரஜினிகாந்த்.
இந்த விஷயத்திலேயே கமல் வேறுபடுவதைப் பார்க்கலாம். அவரது கவனம் முழுவதும் தொழில்நுட்பம், நூதனம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது ஆரம்பம் முதலே. கனமான கதை, மாறுபட்ட திரைக்கதை, புதிய உத்திகள், நவீன தொழில் நுட்பம், புதுப்புது தோற்றங்கள் என்று தமது படங்களின் 'இமேஜையே தமது இமேஜாக ஆக்கிக் கொண்டார்.
குறிப்பாக நாயகனுக்குப் பின்னால் வந்த கமல் படங்களில் புதுப்புது 'கெட் அப்'பில் அவர் தோன்ற ஆரம்பித்திருப்பதைக் கவனிக்கலாம்.
முகத்தைக் கறுப்பாக, விகாரமாக ஆக்கிக் கொள்வதோ, தலைமுடி, மீசையைத் தியாகம் செய்வதோ, கதைப் போக்கினையொட்டி அடி வாங்கிச் சுருண்டு விழுவதோ. எதற்கும் அவர் தயங்குவதில்லை. கதைப்படி என்ன வேண்டுமோ அதைத் தருவதுதான் முக்கியமென்கிற முடிவுக்கு வந்து விட்டிருக்கிறார்.
ஆனால் ரஜினி விஷயம் நேர் மாறுதல்! கதை, அவருக்காகச் 'செய்யப்படுகிறது. அவரது இமேஜுக்குத் தகுந்தாற்போல வடிவம் பெறுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அடி தடி மட்டுமே பிரதானமான அம்சமாக இருந்த ரஜினி படங்கள், 'தில்லு முல்லு'க்குப் பிறகு நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடமளிக்கும் படியாக மாறியிருப்பதைக் காணலாம்.
ரஜினி எது செய்தாலும் எடுபடும் என்கிற சூழல் உருவாக, அவர் தம் கேரக்டரை மெல்லிய நகைச்சுவை முலாம் தடவித்தர ஆரம்பித்தார். 'நகைச்சுவை டிராக் என்று ஒன்று இனி ரஜினி படத்திற்குத் தேவையில்லை' என்று ரசிகர்கள் கருத ஆரம்பிக்கிற அளவுக்கு வேலைக்காரன், வீரா, அண்ணாமலை போன்ற சமீபகாலப் படங்களில் அசத்த ஆரம் பித்திருக்கிறார் ரஜினி.
ஆரம்பத்தில் காதல் இளவரசனாக வும் பின்னால் சீரியஸான கதாநாயகனாக வும் இனம்காணப்பட்ட கமலின் நகைச்சுவை', ரஜினியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் சாபளின் செல்லப்பாவாக வந்த புன்னகை மன்னனாகட்டும், காமேஸ்வர ஐயராக வந்த மை.ம.கா. ராஜனாகட்டும் சோகம் அல்லது நையாண்டி முலாம் பூசிக்கொண்ட செலுலாயிடு சித்திரங்கள்!
இன்னும் விஷயங்களிலும், இருபலருக்குமுள்ள வேறுபாடு சுவையான கான்ட ராஸ்டாக வெளிப்படுகிறது. உதாரணமாக கமல் படங்களில் வழக்க மாகி விட்ட முத்தக் காட்சி... கதையோட்டத் தோடே அவை கலந்து வருவதால் (அல்லது வருவது போல் அமைக்கப்படுவதால்) சென்சார் சடங்குகளில் சிக்காமல், ரசிகர்களுக்கு விருந்தாகியிருக்கின்றன.
ஆனால் இதுவரை ரஜினி படங்களில் இது போன்ற மேற்கத்திய படப்பாணி காட்சிகள் இல்லை. இரண்டு மூன்று பெண்களால் காதலிக் கப்படும் ஹீரோவாக வந்தால் கூட ரஜினி ரசிகர்கள் ஏற்பார்கள் ஆனால் சோகம் இழை யோடும் மென்மையான காதல் உணர்வுகளின் வெளிப்பாட்டை நிராகரித்து விடுவார்கள்!
இந்த வகையில் ரஜினியை எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியாகவும் சுமலை. சிவாஜியின் தொடர்ச்சியாகவும் வைத்துப் பார்க்க வேண்டும்.
எளிய கதை, கொஞ்சம் நீதி, எப்போதும் நல்லதே செய்யும் ஹீரோ, நிறைய பொழுது போக்கு, லேசாக சென்ட்டிமென்ட, மங்கள்மான முடிவு இது எம்.ஜி.ஆர். ஃபார்முலா. விரும்பியோ விரும்பாமலோ இதுவே ரஜினியனுடையதாகவும் ஆகியிருப்பது சற்றுக் கூர்ந்து பார்த்தால் புரியும்.
எம்.ஜி.ஆரின் பாத்திரங்களை அடியொற்றி - சற்று கூட்டியும் குறைத்துமே ரஜினிக்கான பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் முத்தக் காட்சி, காதலை வெளிப்படுத்தும் தவிப்பு, நுணுக்கமான உணர்ச்சிகளின் வெளிப்பாடு போன்றவற்றுக்கு இடமில்லை. ஆக்ஷன் இருக்கும் இடத்தில் இவற்றுக்கெல்லாம் என்ன வேலை?!
சிவாஜியின் எக்ஸ்டென்ஷனாக ஆரம்பித்து, வேறு சில தளங்களிலும் முத்திரை பதித்திருக்கும் கமல், பலரும் செய்யாத, செய்யத் தயங்குகிறவைகளைத் தாம் செய்ய வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது.